சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசியபோது, கோவிட்-19 வைரஸ் தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் சிறு, குறு நடுத்தரத் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆறு மாத காலத்திற்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும். கோவிட்-19 வைரஸ் தொற்று தாக்கத்தால் மூடப்படாமல் இருப்பது தமிழ்நாடு சட்டப்பேரவையும், டாஸ்மாக் கடையும்தான் என கிண்டலாகக் கேள்வி எழுப்பினார்.
இவரைத்தொடர்ந்து பேசிய ஸ்டாலின், தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேரவையில் கொண்டு வந்தார்.
வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பதில்: வரிச்சலுகை அளிப்பது பற்றி தன்னிச்சையாக அரசு முடிவெடுக்க முடியாது. ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு எடுக்கப்படும் பட்சத்தில் அதனை அரசு செயல்படுத்தும் என்று பதிலளித்தார்.
அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், வரிச்சலுகை அளிக்க மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும் வேளையில், மக்களவையில் திமுக எம்பிகளும் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்: கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பால் சிறுதொழில்கள் முடக்கப்படவில்லை. பணியாளர்கள் அனைவரும் அச்சமின்றி பணியாற்றி வருகின்றனர். கோவிட்-19 வைரஸ் தொற்று வெளிநாடுகளிலிருந்து வருபவர்களால் பரவுகிறதே தவிர உள்நாட்டில் வசிக்கும் மக்களிடமிருந்து பரவவில்லை.
தமிழ்நாட்டில் கோவிட்-19 வைரஸ் தொற்றை முன்னெச்சரிக்கையுடன் தடுப்பு நடவடிக்கைகளை அரசு முழு மூச்சில் மேற்கொண்டு வருவதால் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: ரூ.20 லட்சம் மதிப்பிலான கோழிகள் உயிருடன் மூட்டை மூட்டையாகப் புதைப்பு