சென்னை: இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "வணிகப் பெருமக்களின் நலனுக்காக இந்தியாவிலேயே முதன் முறையாக ”தமிழ்நாடு வணிகர் நல வாரியம்” என்ற அமைப்பு தமிழ்நாடு வணிகவரித் துறை சார்பாக 1989 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
இந்த வாரியத்தில் உள்ள உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஏழு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவை : 1. குடும்பநல உதவி 2.மருத்துவ உதவி 3. கல்வி உதவி 4. விளையாட்டுப் போட்டி 5. தீவிபத்து 6. நலிவுற்ற வணிகர்களுக்கு நிதி உதவி 7. சிறப்பான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை.
பயனாளர்கள்
இந்த நலத்திட்டங்கள் மூலம் 1989 ஆம் ஆண்டு முதல் 31 மே 2021 வரை எட்டு ஆயிரத்து 873 உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக இதுவரை செலவிடப்பட்ட மொத்ததொகை ரூபாய் மூன்று கோடியே ஐந்து லட்சத்து 73 ஆயிரம்.
தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ஜுன் 16 அன்று தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர வணிகர்களுக்கு இணையவழி (http://www.tn.gov.in./tntwb/tamil) சேர்க்கை வசதியைத் தொடங்கி வைத்தார்.
மேலும், இணையவழியில் பதிவு செய்ய சிரமம் ஏற்பட்டால் அருகில் உள்ள வணிகவரி வரிவிதிப்பு அலுவலகத்தை அணுகி தங்களின் பதிவை மேற்கொள்ளலாம் அல்லது நேரடியாக வரிவிதிப்பு அலுவலகத்திற்கு சென்று உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் பெற்று பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஆணை
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வணிகர் நல வாரியத்தை சீரமைத்து உறுப்பினர் சேர்க்கையை செம்மைப்படுத்தி திறம்பட செயல்படும் வகையில் சிறு மற்றும் குறு வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அந்தவகையில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) சட்டத்தில் பதிவு பெற்று ”விற்று முதல் அளவு” (Turn Over) ரூ.40,00,000/- (ரூபாய் நாற்பது லட்சம் மட்டும்) உட்பட்ட சிறு வணிகர்கள் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) சட்டத்தின் கீழ் பதிவு பெறாத குறு வணிகர்கள் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேர, சேர்க்கைக் கட்டணத் தொகையான ரூ.500- யை வசூலிப்பதிலிருந்து இன்று முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு விலக்களித்து ஆணையிட்டுள்ளார். எனவே வணிகர்கள், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது". என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்களுக்கு பொறுப்பேற்க முடியாது - அமைச்சர் எ.வ.வேலு