சென்னை ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கலையரசன், சௌந்தர்யா தேவி தம்பதி. இவர்களது குழந்தைகளான விரித்திகா, ஜோஷிதா ஆகிய சகோதரிகள் தங்களது தாத்தா-பாட்டி அவ்வப்போது கொடுக்கும் பணத்தினை சிறுக சிறுக சேமித்து தன் தாயிடம் கொடுத்து வந்துள்ளனர்.
ஊரடங்கு நேரத்தில் உணவின்றி தவிப்பவர்களுக்குப் பலரும் உணவு அளித்து வரும் நிலையில் அதனை தொலைக்காட்சி, கைபேசி வாயிலாக கண்ட சிறுமிகள் தாமும் இதுபோன்று அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என முடிவெடுத்தனர்.
அதன் முயற்சியாக, சென்னை திருவொற்றியூர் பகுதியிலுள்ள வட மாநிலத்தைச் சேர்ந்த பொம்மை செய்யும் தொழிலாளர் குடும்பத்திற்கு, தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தில் உணவு வாங்கி குழந்தைகள், பெரியவர்கள் என அப்பகுதியில் பொம்மை செய்யும் சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கினர்.
மேலும் அச்சிறுமி கரோனா அதிகரித்து வரும் நிலையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் முகக்கவசம் கிருமிநாசினி ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தினர் சிறுமிகளின் இந்தச் செயல் அப்பகுதியில் உள்ள பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.