சென்னை: தாம்பரம் அருகே முடிச்சூரில் கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக மக்களவைக் குழு தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இதில், தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மாவட்ட வருவாய் அலுவலர் இமானுவேல்ராஜ் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச்சந்தித்த டி.ஆர்.பாலு கூறுகையில் , “ கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு அந்த கருத்துகளுக்கு உரிய முறையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.
நிதி பற்றாக்குறை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். நிதி பற்றாக்குறையை சரி செய்து கொடுக்க நானும் சட்டப்பேரவை உறுப்பினரும் அரசிடம் அல்லது எங்களது நிதியிலிருந்து கொடுத்து அந்த நிதிப்பற்றாக்குறை சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளோம்.
பொதுவாக முடிச்சூர் பகுதிகளில் மழைக்காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படுவது வழக்கம். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக இப்பகுதிகளுக்கு மூன்று முறை வந்து பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக்கேட்டறிந்து போர்க்கால அடிப்படையில் வெள்ளத்தடுப்புப்பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 17ஆம் தேதி பிரதமரை சந்திக்கின்றார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஆகியோரை சந்திக்கின்றார். இதில் குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசுத்தலைவர் ஆகியோருக்கு வாழ்த்துகளைத்தெரிவிக்கவிருக்கிறார்.
அதேபோல பிரதமரை சந்தித்து தமிழ்நாடு திட்டங்கள் குறித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பின்போது நிதி பற்றாக்குறை குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்து திட்டங்களை விரைவாக முடித்து தரக்கோரிக்கை விடுப்பார். குடியரசுத்தலைவர் அலுவலகத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு திட்டங்கள் குறித்து ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 21 ஒப்புதல்கள் வர உள்ளன.
நிதியமைச்சர் வாகனத்தின் மீது செருப்பு வீசிய சம்பவம் குறித்து பாஜகவினர் மன்னிப்புக் கூறியுள்ளனர். தேசியக்கொடி இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் அதன் அருகே செருப்பை தூக்கி வீசிய சம்பவம் தேசியக்கொடியை அவமதிக்கும் செயல் என்பதை பாஜகவினர் தான் உணர வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்களை பாஜகவினர் வேண்டுமென்றே செய்திருந்தாலும் அவர்களுக்கு தண்டனைக்கொடுக்கவேண்டும். அதற்கு அவர்களுக்குத் தண்டனை வழங்காமல் அப்படியே விட்டுவிட்டால் அவர்களே அவர்களது தவறு குறித்து உணர வேண்டும்.
இந்தச் சம்பவத்தின் மூலம் அந்தச் செயலில் ஈடுபட்டவர்களின் கட்சிக்குதான் இது அவப்பெயர். அவர்கள் சிறுமையாக நடந்து கொண்டது பொதுமக்களுக்கு தெளிவாக தெரிந்து இருப்பதே பாஜகவினருக்கு அவமானம். அதுவே அவர்களுக்கு தண்டனை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது: ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்