சென்னை போக்குவரத்து காவல் துறை சிறப்பு வாகன தணிக்கை ஒன்றை நடத்தி விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை மட்டும் சோதனை செய்தனர். அதில், சுமார் 100 வாகன ஓட்டிகள் Sliding number plate என கூறப்படும் நம்பர் பிளேட்டை மறைத்து வைக்கும்பபடியான வகையில் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த 100 வாகன ஓட்டிகள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, எந்த கடைகளில் இதுபோன்ற நம்பர் பிளேட்டுகள் மாற்றி தரப்படுகிறது என்பது குறித்து போக்குவரத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அண்ணாசாலை கதீட்ரல் கார்டன் சாலையிலுள்ள "சென்னை பைக்கர்ஸ்" என்ற கடையிலும், ஆலந்தூர் ரயில்வே நிலையம் சாலையிலுள்ள "நியூ மெகா ஸ்டிக்கர்ஸ்" எனும் கடையிலும் இந்த ‘ஸ்லைடிங் நம்பர் பிளேட்’ விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
உடனடியாக அந்த இரண்டு கடைகளுக்கும் விரைந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், கடைகளில் சோதனை நடத்தி 32 ஸ்லைடிங் நம்பர் பிளேட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், சட்டவிரோதமாக போக்குவரத்து விதிகளை மீறி ஸ்லைடிங் நம்பர் பிளேட்டுகளை விற்பனை செய்ததற்காக இரண்டு கடைகளின் உரிமையாளர்களான பிரவீன்குமார், சரத்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், இவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இதுபோன்ற நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தி இளைஞர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதால் இத்தகைய நம்பர் பிளேட்டுகளை விற்பனை செய்யவும், அதனை பயன்படுத்தவும் கூடாது என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருடுபோன பைக்கை துணிந்து சென்று மீட்ட தடகள பயிற்சியாளர்!