சென்னை: தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன் (52) - ஜனகா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கணவன், மணைவி இருவரும் சேர்ந்து வண்டலூர் அடுத்த ஓட்டேரி அரசு மேல் நிலைப்பள்ளி அருகே மீன் கடை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி அன்று வழக்கம் போல் பார்த்திபனும் அவரது மனைவி ஜனகாவும் கடையை திறந்து வியாபாரம் செய்துள்ளனர்.
அப்போது அங்கு காரில் வந்தி இறங்கிய ஆறு பேர் கொண்ட கும்பல், பார்த்திபன் மற்றும் ஜனகா இருவரையும் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே துடிக்கதுடிக்க உயிரிழந்தார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜனகாவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் பார்த்திபனின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
பார்த்திபன் மகளும் அவரது வீட்டின் அருகே உள்ள சரவணன் என்பவர் மகளும் தோழிகளாக இருந்து வந்துள்ளனர். இதில் சரவணன் மகளை மணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். மேலும் சரவணனின் மகள் இன்ஸ்டாகிராம் மூலம் மற்றொரு நபரையும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மணிவாக்கத்தைச் சேர்ந்த பிரேம்குமார் பார்த்திபன் மகள் மற்றும் சரவணன் மகள் ஆகியோரை அழைத்துக் கொண்டு திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சரவணன் மகளின் இன்ஸ்டாகிராம் காதலனும் அவருடைய நண்பர்களுடன் சென்று பிரேம்குமாரை அடித்து கொலை செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பிரேம்குமாரின் அண்ணன் பிரசாந்த், பார்த்திபனின் மகள்தான் தனது தம்பியை ஆள் வைத்து கொலை செய்ததாக நினைத்து, பழிக்கு பழி வாங்க கொலை செய்ய திட்டமிட்டு வந்துள்ளார். இந்நிலையில் தான் கடந்த 13ஆம் தேதி அன்று பார்த்திபனை கொலை செய்து அவரது மனைவியையும் தாக்கி விட்டு தப்பியுள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று (பிப். 15) வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுப்பட்டுகொண்டு இருந்தபோது அதிவேகமா வந்த கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது காரில் கொலை குற்றவாளிகள் இருந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்க்கொண்டனர்.
விசாரனையில் மணிவாக்கத்தை சேர்ந்த பிரசாந்த் (22), அஜய் என்கிற பப்ளு (22), தினேஷ் என்கிற லியோ (28), விக்னேஷ் (20), படப்படையை சேர்ந்த பிரதீப் (19), சிங்கபெருமாள்கோவிலை சேர்ந்த தனுஷ்குமார் என்கிற கருப்பு (20) என தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்த பட்டா கத்திகள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 6 பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கோவை நீதிமன்ற வளாக கொலை வழக்கு: 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!