குஜராத் துறைமுகத்தில் கப்பல் வழியாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கடந்த 18ஆம் தேதி வருவாய் நுண்ணறிவுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் முந்த்ரா துறைமுகத்தில் முகத்துக்குப் பூசும் பவுடர் கொண்டுவரப்பட்ட இரண்டு கண்டெய்னர்களில் மூன்றாயிரம் கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.
அவற்றைப் பறிமுதல்செய்து ஆய்வு செய்தபோது, இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் 21 ஆயிரம் கோடி ரூபாய் எனத் தெரியவந்தது. அந்தப் போதைப்பொருளை அனுப்பிய நபர்கள் யார் என விசாரணை நடத்தியபோது, விஜயவாடாவில் இயங்கிவரும் நிறுவனத்தின் பெயரில் ஆப்கானிஸ்தானிலிருந்து, முந்த்ரா துறைமுகத்திற்கு வந்தது தெரியவந்தது.
மேலும் போதைப்பொருளை டெல்லிக்குக் கடத்த முற்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஜிஎஸ்டி பெயரை வைத்து விசாரித்தபோது சென்னையைச் சேர்ந்த தம்பதியான மச்சாவரம் சுதாகர், வைஷாலி ஆகியோர் இந்நிறுவனத்தை நடத்திவந்தது தெரியவந்தது.
பிறகு செங்கல்பட்டு மாவட்டம் கொளப்பாக்கத்தில் வைஷாலியின் தந்தை வீட்டில் பதுங்கியிருந்த இருவரையும் கைதுசெய்து, குஜராத் முந்த்ரா நீதிமன்றத்தில் முன்னிறுத்தி 10 நாள்கள் காவலில் எடுத்து வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
விசாரணையில், ஆப்கானிஸ்தானிலிருந்து போதைப்பொருள்கள் கடத்திவருவதாகவும் இதில் தாலிபான்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
பின்னர் இது தொடர்பாகச் சென்னை, நொய்டா, கோயம்புத்தூர், டெல்லி, அகமதாபாத், மந்த்வி, காந்திதம், விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் சோதனையில், டெல்லி குடோனில் 16.1 கிலோ ஹெராயினும், 10.2 கிலோ கொகைனும், நொய்டாவில் 11 கிலோ ஹெராயின் இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல்செய்த வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இவ்வழக்கில் ஆப்கனைச் சேர்ந்த நான்கு பேர், உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர், மூன்று இந்தியர்கள் என மொத்தமாக எட்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: குஜராத் ஹெராயின் விவகாரத்தில் திருப்பம்: சென்னைவாசிகள் இருவர் கைது