தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனை கடந்த மாதம் டெல்லியில் சந்தித்து புதிதாக ஆறு மருத்துவக் கல்லுரிகளை தொடங்க அனுமதி கோரி மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக மாவட்ட தலைமை மருத்துவமனையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிற்குள் 20 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து, அதற்குரிய அனுமதியுடன் மத்திய அரசுக்கு மருத்துவக் கல்வி இயக்குனரகம் திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்தது.
மாநிலம் முழுவதும் ஆறு மருத்துவக் கல்லூரிகளைப் புதிதாகத் தொடங்க தமிழ்நாடு அரசு சார்பில் கோரப்பட்ட அனுமதியை மத்திய அரசி பரிசீலித்து வருவதாகப் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசு இன்று அனுமதியளித்துள்ளது.
இந்த மருத்துக் கல்லூரிகளை அமைக்க 60 விழுக்காடு நிதியை மத்திய அரசு வழங்கும். அதன்படி சுமார் ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்குத் தலா ரூ.325 கோடி விதம் 1950 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது மருத்துவ படிப்புக்கு 3600 இடங்கள் உள்ளன. புதிதாக தொடங்கவுள்ள மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 இடங்கள் வீதம் கூடுதலாக 900 இடங்கள் மாணவர் சேர்க்கைக்குக் கிடைக்கும். இதனால் தமிழ்நாட்டிலுள்ள மருத்துவ படிப்புக்கான இடங்கள் 4500 ஆக உயரும்.
மத்திய அரசு அனுமதியளித்ததற்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: கால்நடைகளைக் காக்கவருகிறது 'அம்மா ஆம்புலன்ஸ்'!