சென்னை: தமிழ்நாட்டில் 2022 - 2023ஆம் கல்வியாண்டின்படி பி.இ., பி.டெக் பொறியியல் படிப்பில், மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள் 5, மாநில அரசின் பொறியியல் கல்லூரிகள் 11, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் 3 மற்றும் 408 தனியார்- சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகின்றன.
அதேபோல், 31 பி.ஆர்க் கல்லூரிகள், 29 எம்பிஏ கல்லூரிகள், 2 எம்சிஏ பட்டப்படிப்பு கல்லூரிகளும் அங்கீகாரம் பெற்று இயங்குகின்றன. மொத்தமாக 489 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் இந்த பொறியியல் கல்லூரிகள், ஆண்டுதோறும் தங்களின் இணைப்பு அங்கீகாரத்தைப் புதுப்பிக்க வேண்டும். அதன்படி, 2023-24ஆம் கல்வியாண்டுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பிக்க, கல்லூரிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் விண்ணப்பித்தன. கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை பொறியியல் கல்லூரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
விண்ணப்பத்தின்போது, என்ஐஆர்எப் சான்றிதழ், கடந்த 3 ஆண்டுகளுக்கான வருவாய் மற்றும் செலவின கணக்குச் சான்றிதழ், கடந்த 5 ஆண்டுகளில் கல்லூரியில் பாடப்பிரிவு வாரியாக சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. அதேபோல், கல்லூரியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு விவரங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரையின்படி ஊதியம் வழங்கப்பட்ட விவரம் உள்ளிட்ட விவரங்களும் பெறப்பட்டன.
இந்த நிலையில், 2023- 24ஆம் கல்வியாண்டில் 6 பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அங்கீகாரத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதில் 4 கல்லூரிகள், 2 கல்லூரிகளாக இணைப்பதற்கும் - 4 கல்லூரிகள் நிர்வாகத்தினை மாற்றுவதற்கும் - ஒரு பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரியாக மாற்றவும் விண்ணப்பம் செய்துள்ளன.
மேலும், 2023 - 2024ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 134 பொறியியல் கல்லூரிகளில், பாடப் பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சிவில் இன்ஜினியரிங் பிரிவில் ஆயிரத்து 110 இடங்களும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் ஆயிரத்து 836, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 360 மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் 390 இடங்களும் குறைந்து இருக்கின்றன.
அதேநேரம், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவுகளுக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு 38 ஆயிரத்து 594ஆக இருந்த நிலையில், தற்போது கூடுதலாக ஆயிரத்து 800 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, தகவல் தொழில் நுட்பப் பிரிவில் பிரிவில் 15 ஆயிரத்து 463 இடங்களுடன், வரும் ஆண்டில் 2 ஆயிரத்து 280 இடங்களும் - ஏ.ஐ. மற்றும் டேட்டா சயின்ஸ் பிரிவில் 13 ஆயிரத்து 953 இடங்களுடன், கூடுதலாக 2 ஆயிரத்து 520 இடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
அதேபோல், பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் சைபர் செக்யூரிட்டி பாடப் பிரிவில் ஆயிரத்து 710 இடங்களுடன், கூடுதலாக ஆயிரத்து 200 இடங்களும் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஏ.ஐ-மிஷின் லேர்னிங் பிரிவில் ஆயிரத்து 230 இடங்களுடன், கூடுதலாக 690 இடங்களும், எம்பிஏ பிரிவில் 17 ஆயிரத்து 58 இடங்களுடன் கூடுதலாக ஆயிரத்து 269 இடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பொறியியல் பாடப்பிரிவுகளில் மொத்தமாக 9 ஆயிரத்து 759 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், 4 பாடப் பிரிவுகளில் 3 ஆயிரத்து 696 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இளநிலை பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பம் அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: 2023-24 கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு, பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!