சென்னை: சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்ய ஆராய்ச்சி மையத்தில், ரஷ்ய விண்வெளி ஏவுதளப் பயண பாராட்டு விழா நடைபெற்றது. அகத்தியர் விண்வெளி அறிவியல் குழுமம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ரஷ்யா செல்ல உள்ள தமிழக மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கரோனா காலத்தில் முடங்கி இருந்த மாணவர்களை மேம்படுத்தும் விதமாக, 'ராக்கெட் சயின்ஸ்' என்ற பெயரில் ஆன்லைன் பயிற்சி திட்டம் 2022 என்ற வகுப்பு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில், தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்தப் பயிற்சி வகுப்பில், மாணவர்களுக்கு விஞ்ஞானி சிவதாணு பிள்ளை உள்ளிட்ட செயற்கைக்கோள் விஞ்ஞானிகள் பலர் பயிற்சி வழங்கினர்.
அந்தப் பயிற்சியில் சிறந்து விளங்கிய 50 மாணவர்கள், ரஷ்யாவில் உள்ள யூரிககாரின் விண்வெளி ஆய்வு மையத்தைப் பார்வையிட அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இந்த மாணவர்களைப் பாராட்டும் விதமாக சென்னை ரஷ்ய ஆராய்ச்சி மையத்தில், அகத்தியர் விண்வெளி அறிவியல் குழுமம் சார்பில் ரஷ்ய விண்வெளி ஏவுதளப் பயணப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ரஷ்யா செல்ல உள்ள மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவதாணு பிள்ளை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, நம் நாட்டின் மிகப்பெரிய சொத்து 35 வயதுக்கு கீழ் 800 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள் என்பதுதான் எனத் தெரிவித்தார். மேலும், கரோனா காலகட்டத்தில் மாணவர்களுக்காக இந்தப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்ட நிலையில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சிகளை பெற்றுக்கொண்டனர் எனவும், அதிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் திறமை வாய்ந்தவர்கள் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், 'இன்டர்நேஷனல் ஸ்பேஸ் கன்ட்ரோல் சென்டர், உள்ளிட்ட ஸ்பேஸ் தொடர்பான இடங்களுக்கு ரஷ்யாவில் சென்று 50 மாணவர்கள் பார்வையிட உள்ளனர். நாசா தொடங்கியுள்ள திட்டத்தின்படி 2026-ல் நிலவுக்கு பயணமாக உள்ளது. திட்டமாக வெளியிடவில்லை. ஆனால் அதை நோக்கி தான் செல்கிறோம். நிலவில் தென்புறம் முதன்முதலில் இறங்குவது நாம் தான். நிலவில் முக்கியமான தாதுபொருள் ஹீலியம். அது நிலவில் மட்டும் தான் உள்ளது. இதைக் கொண்டு வர வேண்டும் என்று சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் திட்டம் வைத்துள்ளனர்.
2024ஆம் ஆண்டு ககன்யான் ரோபோ உடன் செல்லப் போகிறது. ஐந்தாண்டுகளில் நிலவிற்கு செல்ல வாய்ப்புள்ளது. 2030-ல் இந்தியர்களும் நிலாவிற்கு பயணம் செய்ய அமெரிக்காவின் ஆர்க்கிமிடீஸ் திட்டத்தில் இணைய உள்ளோம். ககன்யான் திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்ட பின் படிப்படியாக தான் திட்டங்கள் செயல்படுத்தப்படும் அனைத்தும் யோசனையில் தான் உள்ளன உருவம் கொடுக்கப்படவில்லை' என்றார்.
மேலும், இணைய வசதி இருப்பதால் ஒரு விஷயம் சொல்லிக் கொடுத்தால் மாணவர்கள், அதை பல விஷயமாக மாற்ற முயல்கிறார்கள் எனத் தெரிவித்த சிவதாணு பிள்ளை, அது அவர்களின் ஆர்வத்தைக் காட்டுகிறது எனவும், பொறியியல் கல்லூரி மாணவர்களை விட அரசுப் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர் எனவும் கூறினார்.
மேலும், இந்த திட்டம் நிரந்தரமானதாக மாற வேண்டும் என்பது தனது ஆசையாக இருந்தாலும், அது தமிழக பள்ளிக்கல்வித்துறையிடம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், மாணவர்களை வளர்த்தெடுக்க மற்ற விஞ்ஞானிகளும் முன் வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ஆடி வெள்ளி; திருவண்ணாமலை ஸ்ரீ பச்சையம்மன் கோயிலில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்!