சென்னை: இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அதிதி சங்கர், மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் இன்று (ஜூலை 14) வெளியாகி உள்ள திரைப்படம், மாவீரன். மாவீரன் திரைப்படம் இன்று காலை முதல் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் திரையரங்கிற்கு சென்று ரசிகர் உடன் தனது வெற்றியைக் கொண்டாடினார். இதையடுத்து சென்னை குரோம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள வெற்றி திரையரங்கிற்கு தனது குடும்பத்துடன் சிவகார்த்திகேயன் சென்று ரசிகர்களுடன் அமர்ந்து மாவீரன் படத்தை பார்த்து ரசித்தார். இப்படத்தின் கதாநாயகி அதிதி ஷங்கரும் வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் படத்தைக் கண்டு களித்தார்.
சிவகார்த்திகேயன் தொலைக்காட்சி துறையில் அறிமுகமாகி, தனது திறமையின் மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர். யதார்த்தமான அவரது காமெடி திறமையினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களையும் கட்டிப்போட்டார். காமெடியில் மட்டும் தான் சிவகார்த்திகேயன் கலக்குவாரா? என்னும் கேள்விகளை அடித்து நொறுக்கியது, இவர் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படங்கள். இருப்பினும் மாவீரன் படத்திற்கு முன்னதாக வெளியான இவரது படங்கள் ஆக்ஷன் பக்கம் சற்று தொய்வையே சந்தித்தன.
இந்நிலையில் இந்த மாவீரன் திரைப்படம் மீண்டும் சிவகார்த்திகேயனை ஆக்ஷன் ஹீரோவாக காண்பிக்கும் படமாக அமைந்துள்ளது. மாவீரன் திரைப்படம் முடிந்து திரையரங்கில் இருந்து வெளியே வந்த சிவகார்த்திகேயன் படம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, ''மாவீரன் படத்தைப் பார்ப்பதற்கு வந்துள்ள எனது ரசிகர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி. மாவீரன் திரைப்படத்தைப் பொறுத்தவரை பேன்டஸி, ஆக்சன், டிராமா கலந்த புதுவிதமான கதைக்களத்தைக் கொண்டு படமாக உருவாகியுள்ளது.
என்னதான் புதுவிதமான கதைகளைக் கொண்டு படம் எடுக்கப்பட்டாலும், திரையரங்கில் பொதுமக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்ன ரெஸ்பான்ஸ் கொடுக்கிறார்கள் என்பது தான் முக்கியம். படத்தில் எதையெல்லாம் வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோமோ அதற்கு எல்லாம் ரசிகர்கள், பொதுமக்களிடையே திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நான் திரையரங்கில் ரசிகர்கள் உடன் படம் பார்க்கும் பொழுது GooseBumpsஆக இருந்தது. படம் பார்த்த அனைவருக்கும் நன்றி. படம் பார்க்காதவர்கள் திரையரங்குகளில் சென்று படம் பாருங்கள். மாவீரன் படத்தில் நான்கு இடங்களில் சண்டைக் காட்சிகள் வருகின்றன. அதற்கு திரையரங்கில் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். ரெட் ஜெயின்ட் நிறுவனம் படத்தை வெளியிட்டுள்ளது. அதிக திரையரங்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி படத்தைப் பார்த்துவிட்டு எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு படம் மிகவும் நன்றாக உள்ளது. இப்படம் சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டது. எனக்கு மிகவும் பிடித்துள்ளது எனக் கூறினார். அடுத்த படம் குறித்து தற்போது வரை எதுவும் வெளியிடப்படவில்லை. அதைப் பற்றி நான் சொன்னால் நன்றாக இருக்காது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: Maaveeran: குடும்பத்துடன் 'மாவீரன்' திரைப்படம் பார்த்த சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர்!!