சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதையடுத்து பயணிகளை கவர்வதற்குப் பல்வேறு முன்னெடுப்புகளை மெட்ரோ நிர்வாகம் எடுத்துள்ளது.
பயணிகளை அதிகரிப்பதற்காக பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சிங்காரச் சென்னை அட்டை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், சிங்காரச்சென்னை அட்டையை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வின்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), தி.அர்ச்சுனன் (திட்டம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கட்டம் 1 மற்றும் கட்டம் 1 நீட்டிப்பில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து சிங்காரச் சென்னை அட்டையை (National Common Mobility Card - தேசிய பொது இயக்க அட்டை) அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது, சிங்காரச்சென்னை அட்டைகளை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும், இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயன்படுத்த முடியும். எம்.எம்.ஆர்.டி.ஏ மும்பை லைன் 2 ஏ & 7, பெங்களூரு மெட்ரோ, டெல்லி விமான நிலைய மெட்ரோ, கான்பூர் மெட்ரோ, மும்பை பேருந்துகள் மற்றும் கோவாவில் கடம்பா போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் ஆகியவற்றிலும் பயன்படுத்த முடியும்.
எதிர்காலத்தில், பேருந்து, புறநகர் ரயில்வே, சுங்கச்சாவடி, வாகன நிறுத்துமிடம், ஸ்மார்ட் சிட்டி மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிரிவுகளில் பணம் செலுத்த வாடிக்கையாளர்கள் இந்த ஒற்றை அட்டையைப் பயன்படுத்தலாம். அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடனும் தேசிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ரூபே தொழில்நுட்பம் இதன் அடிப்படையாகும்.
இந்த அட்டையை பாரத ஸ்டேட் வங்கி வழங்கும், வாலட் வசதியுடன் சேர்த்து அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை சேமிக்க முடியும். புதிய அட்டையை பயன்படுத்துவதற்கும் மேலும் அட்டைகளை ரீசார்ஜ் செய்வதற்கும் பிரத்யேக இணையதளத்தை (https://transit.sbi/swift/customerportal?pagename=cmrl) பாரத ஸ்டேட் வங்கி கொண்டுள்ளது. இந்த அட்டைக்கான இருப்புத் தொகையை பணம் மூலமாகவும், ஆன்லைன் வங்கி சேமிப்புக் கணக்குகள் மூலமாகவும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த அட்டைப் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இது குறைந்தபட்ச KYC உடன் எளிதான பதிவு செயல்முறை கொண்டது.
முதற்கட்டமாக, கோயம்பேடு மெட்ரோ, சென்ட்ரல் மெட்ரோ, விமான நிலையம் மெட்ரோ, உயர் நீதிமன்றம் மெட்ரோ, ஆலந்தூர் மெட்ரோ, திருமங்கலம் மெட்ரோ, கிண்டி மெட்ரோ ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் தேசிய பொது இயக்க அட்டை வழங்கப்படும். தேசிய பொது இயக்க அட்டைகளை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களின் தானியங்கி கட்டண வசூல் அமைப்பு கேட்களிலும் பயன்படுத்தலாம்" என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: போலி சாஃப்ட்வேர் மூலம் அதிக விலைக்கு ரயில் டிக்கெட் விற்பனை: முக்கிய குற்றவாளி கைது