சென்னை: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து சிங்கப்பூருக்கு 318 பயணிகளுடன் நேற்று (மார்ச்.27) சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில், அந்த விமானம் நடுவானில் பறந்தபோது, அதிலிருந்த அமெரிக்க பயணி ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். இதனைத்தொடர்ந்து, சென்னை விமானநிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், அமெரிக்க பயணி சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளார்.
அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை 318 பயணிகளுடன் நியூயார்க்கில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கென்னடி என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், அந்த பயணி வலியால் விமானத்துக்குள் துடித்துக் கொண்டு இருந்தார்.
விமான பணிப்பெண்கள் அவருக்கு அவசரமாக முதலுதவி சிகிச்சை அளித்ததோடு, விமானிக்கும் அவசரமாக தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்கி பயணிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்தார். அப்போது விமானம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வழியாக சென்று கொண்டு இருந்தது. ஆனால், விமானி அருகே உள்ள தமிழ்நாட்டில் சென்னையில் தரை இறக்கினால் மருத்துவ சிகிச்சைக்கு வசதியாக இருக்கும் என நினைத்தார்.
இதனை அடுத்து விமானி அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்டு மருத்துவ காரணத்துக்காக விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார். உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிங்கப்பூர் விமானத்தை, உடனடியாக சென்னையில் தரையிறங்க அனுமதிப்பதோடு பயணிக்கான மருத்துவ வசதிகளையும் செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
இதன் பின்னர், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உடனடியாக, சென்னை விமான நிலைய மருத்துவக்குழுவினர் விமானத்துக்குள் ஏறி, அமெரிக்க பயணி கென்னடியை பரிசோதித்தனர். அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறவேண்டும் என்று தெரிவித்தனர்.
உடனே சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பயணி கென்னடிக்கு அவசர கால மருத்துவ விசா வழங்கினர். இதை அடுத்து பயணி கென்னடி விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின்பு அமெரிக்க பயணி கென்னடி மருத்துவ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது குறித்து விமான நிறுவன அதிகாரிகள் சென்னையில் உள்ள அமெரிக்க நாட்டு தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின்பு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 317 பயணிகளுடன் சுமாரும் 4 மணி நேரம் தாமதமாக சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.
இதையும் படிங்க: Saudi Iran Peace: சவுதி - ஈரான் ஒப்பந்தம்; சீனாவின் யுக்தி, இந்தியாவின் நிலைப்பாடு என்ன? - சிறப்பு அலசல்!