சென்னை திருவான்மியூர் ஐஸ்வர்யா காலனி பகுதியைச் சேர்ந்தவர் தேவி பிரசாத்(40). இவர் தரமணியில் உள்ள ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் சந்திரா (65) என்பவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்வதற்காக கடந்த 24ஆம் தேதி வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது அறுவை சிகிச்சை செய்தவதற்காக மருத்துவர்கள், சந்திராவின் நகைகளை கழட்டி பிரசாத்திடம் கொடுத்துள்ளனர். அதில் 10 சவரன் தாலியை மட்டும் சந்திராவின் பர்சில் வைத்து விட்டு மீதமுள்ள நகையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இந்த நிலையில், அறுவை சிகிச்சை முடிந்து கடந்த 4ஆம் தேதி வீட்டிற்கு வந்த சந்திரா, பர்சை திருந்து பார்த்தபோது அதிலிருந்த தாலி மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனால் கடந்த 5ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகத்திடம் இது தொடர்பாக பிரசாத் புகார் அளித்தார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அங்குள்ள சிசிடிவியை ஆராய்ந்த போது எந்த விதமான துப்பும் கிடைக்காததால் வடபழனி காவல் நிலையத்தில் பிரசாத் புகார் அளித்தார். மேலும், மருத்துவமனையில் சுத்தம் செய்யும் பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறினார். இதனால் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.