ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் 50 கோடி ரூபாய் செலவில் நடைபாதைகள் புனரமைக்கப்பட்டது என்றும், ஆனால் அவற்றை சரியாக பராமரிக்கவில்லை என்றும் சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டர் வந்தனா சக்காரியா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
முன்னதாக இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான சத்யநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையிலுள்ள நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், உதவி செயற்பொறியாளர் தலைமையிலான அலுவலர்கள் குழு நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சாலையோர வியாபாரிகளை உடனடியாக அப்புறப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, என்.எஸ்.சி. போஸ் சாலையில் நடைபாதை வியாபாரம் நடத்தத் தடை விதிக்கப்பட்ட பகுதியாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த உத்தரவை அமல்படுத்தாதது ஏன் என்பது குறித்து வரும் 19ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு - காரணம் என்ன?