சென்னை: இன்றைய சூழலில் அரியவகை நோயான புற்றுநோயை சித்த மருத்துவத்தால் குணமடையச் செய்வதற்கான சாத்திய கூறுகள் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகின்றன. தீரா நோயான புற்றுநோயை குணப்படுத்துவதில் சித்த மருத்துவம் முக்கிய பங்கு வகித்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து அறிஞர் அண்ணா இயற்கை மருத்துவமனையில் 23 ஆண்டுகளாக சித்த மருத்துவராக பணியாற்றி வரும் ஜெ.பி.வெண்தாமரைச்செல்வி ஈ.டிவி பாரத் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "ஏழாம் தலைமுறை சித்த மருத்துவர் என கூறிக் கொள்வதில் மிகவும் பெருமை அடைகின்றேன்.
அறிஞர் அண்ணா இயற்கை மருத்துவமனையில் பல நோய்களுக்கு சிறப்பான சிகிச்சை பார்க்கப்படுகிறது. புற்றுநோய்க்கென ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 7:30 மணி முதல் மதியம் 12 மணி வரை சிறப்பு சிகிச்சைகளை நான் அளித்து வருகிறேன். தற்காலத்தில் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வரும் நோய்களில் புற்றுநோய் முதன்மையான இடத்தில் இருந்து வருகிறது. இதற்கான முக்கிய காரணம் நம்முடைய வாழ்வியல் முறையில் ஏற்பட்ட மாற்றம் தான்.
சரியான உணவு முறை இல்லாததும், பதப்படுத்தப்பட்ட பொருள்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பொருள்களை உண்பது, பாதி அளவில் வேகவைக்கப்படும் பரோட்டா, இடியாப்பம் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்வது, உனடியாக சமைக்கப்பட்ட உளர்ந்த உணவுகளை இளைஞர்கள் வாங்கி சாப்பிடுவது போன்றவைகள் தான் புற்றுநோய்க்கான முக்கிய காரணியாக இருக்கின்றன.
'முதல் நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்' என பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்களின் கூற்றுப்படி, முதல் நாளில் சமைத்த உணவு அமுதமாக இருந்தாலும் கூட அதனை சாப்பிடக்கூடாது. வாழ்நாள் நல்லா இருக்கவும், நோயில்லாமல் வாழவும் திரும்பத் திரும்ப சமைத்த உணவை சாப்பிடக்கூடாது. உணவை திரும்ப திரும்ப சமைக்கும் போது, புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்களை உருவாகுகிறது என்று நவீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
புற்றுநோய் குறித்து தமிழ் சித்தர்களின் குறிப்பேடு: புற்றுநோய் எனக் கூறினால் நினைவுக்கு வருவது ஹீமோதெரபி, ரேடியேசன் சிகிச்சை தான். நவீன மருத்துவர்களால் நூற்றுக்கணக்கான புற்றுநோய்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகத்தியர் அவருடைய 'இரண நூலில்' நூற்றுக்கணக்கான புற்றுநோய்கள் உள்ளதை கூறியுள்ளார். சித்த மருத்துவத்தில் புற்றுநோய் பற்றியும், அதற்கான நூற்றுக்கணக்கான மருந்துகளையும் கூறியுள்ளனர்.
சித்தர்களுக்கு குருவாக கருதப்படும் பதினெண் சித்தர்கள் புற்றுநோய் குறித்து கூறியுள்ளனர். அகத்தியர் எழுதி உள்ள அகத்தியர் இரண நூல், அகத்தியர் வைத்திய வல்லாதி, போகர் 700, புலிப்பாணி 500, யாக்கோபு வைத்திய காவியம் போன்ற பல நூல்களில் புற்றுநோய் பற்றிய குறிப்புகளும், அதற்கான பெரும் மருந்துகள் பற்றிய தகவல்களும் கூறப்பட்டுள்ளன.
அறிஞர் அண்ணா இந்திய மருத்துவத்தின் சித்த மருத்துவப் பிரிவில், புற்று நோய்க்கு தேவையான பெரும்பாலான மருந்துகளை அங்குள்ள மருந்தகத்தில் தரமாக தயாரிக்கிறோம். அனைத்து மருந்துகளும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களால் கூறப்பட்ட மருந்துகள். எந்த மருந்தையும் சித்த மருத்துவ துறையில் புதிதாக கண்டுபிடிக்கவில்லை.
சித்தர்கள் கொடுத்துவிட்டு போன மருந்துகளே லட்சக் கணக்கில் இருக்கிறது. அந்த மருந்துகளை தரமாக தயார் செய்து புற்றுநோய் சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு வழங்கி வருகிறோம். சித்த மருந்துகளை நோயாளிக்கு வழக்கும் போது வாழ்நாள் நீட்டிப்பு நன்றாக இருக்கிறது. சித்த மருந்துகளை உட்கொள்ளும் போது பக்கவிளைவுகள் என எதுவும் இருக்காது. ஹூமோதெரபி, ரேடியேசன் சிகிச்சையை தாக்குபிடிக்க முடியாமல் வரக்கூடிய நோயாளிகள், சித்த மருந்துகள், லேகியங்கள், சூரணங்கள் இவற்றை சாப்பிடும் போது அவர்களுடைய ஆரோக்கியம் மேம்படுகிறது. அது மட்டும் அல்லாமல், உடல்நலம், மனநலம் ஆகியவற்றிலும் மேம்பாடு அடைவதுடன், உடல் நலத்திலும் முன்னேற்றம் அடைவதையும் பார்க்க முடிகிறது.
நோயாளி சித்த மருந்துகள் எடுக்கும் போது அவர்களின் உடல் எடை கூடுகிறது. புற்று நோய் சிகிச்சை பெறும் நோயாளிக்கு நோயின் வீரியம் குறைகிறதா என்பதையும் 3 மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்து பார்க்கிறோம். அதனை புற்றுநோய் பிரிவில் ஆவணமாகவும் பதிவு செய்துவருவது, வரும் காலங்களில் மருத்துவ ஆராய்ச்சிக்கு உதவியாக அமையும்.
விண்ணவர் மருத்துவத்தின் தன்மை: அறிஞர் அண்ணா மருத்துவமனையில் விண்ணவர் மருத்துவம் சொல்லக்கூடிய ரசகந்தி மெழுகு, இடிவல்லாதி மெழுகு, நந்தி மெழுகு, சித்திரமூல குளிகை போன்ற பெரும் மருந்துகள் புற்றுநோய்க்கு கொடுக்கப்படுகிறது. மேலும் ரேடியேஷன் தெரபிக்கு இணையாக புகைகளை சித்தர்கள் சொல்லி இருக்கின்றனர். அதன்படி அகத்தியர் குழம்பு, கௌசிகர் குழம்பு போன்றவை புகைப்பிடிக்கும் பொழுது மார்பகப் புற்றுநோய் உள்ளவர்களுக்கு கட்டியின் தன்மை மற்றும் வீரியம் குறைவதை கண்டறிய முடிகிறது.
புற்றுநோய் நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் ஐந்து தூண்கள்: ஆரம்ப நிலையிலேயே புற்று நோயை கண்டறிந்து சித்த மருத்துவம் எடுத்துக் கொண்டால் அவர்களுடைய வாழ்நாள் நீட்டிப்பு சிறந்த முறையில் இருக்கும். அது மட்டும் இல்லாமல், வலியில்லாத சுகமான மருத்துவத்தை புற்று நோய்க்கு மேற்கொள்ளலாம். புற்றுநோய் சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஐந்து விதமான முறைகளை பின்பற்றுகிறோம். இந்த முறை நோயாளிகளுக்கு தூண்களாக அமைகின்றது.
முதலில், நோயாளிக்கு சித்த மருத்துவத்தின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும் என்பதற்காக சித்த மருத்துவத்தை பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறுகிறோம். சித்த மருத்துவத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். இந்த மருந்துகளை ஆய்வு செய்து கண்டுபிடிக்கவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆன்மீக அறிவின் மூலமாக உலக நன்மைக்கு கொடுக்கப்பட்ட மருத்துவம் என்பதை கூறுகிறோம். அப்போது அவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கிறது.
ஆன்மீகத்தைச் சார்ந்த சித்த மருத்துவம்: சித்த மருத்துவம் ஆன்மீகத்தைச் சார்ந்த மருத்துவம். சித்த மருத்துவத்தின் முதல் சித்தனாக சிவபெருமான் வர்ணிக்கப்படுகிறார். எனவே கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் வந்தாலும் ஒவ்வொரு வேலை மருந்து சாப்பிடும் முன்னர் அவர்களின் கடவுளை வணங்கிவிட்டு சாப்பிடுங்கள் எனக் கூறுகிறோம். மேலும் அவர்களுக்கு மன ரீதியான ஆலோசனையும் வழங்குகிறோம்.
அறிஞர் அண்ணா மருத்துவமனையில் பஞ்சமுட்டக்கஞ்சி என்பதை இலவசமாக புற்றுநோயாளிகளுக்கு தருகிறோம். புற்றுநோயின் முதல் அறிகுறி அவர்களின் உடல் எடை குறைவது தான். ஹீமோதெரபி ரேடியேஷன் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருபவர்கள் ஏற்கனவே உடல் எடை குறைவாகத் தான் வருவார்கள். அவர்களுக்கு காய, கல்ப மருந்துடன் பஞ்சமுட்டக்கஞ்சி கொடுக்கும் போது அவர்களின் எடை வேகமாக அதிகரிக்கிறது. நோயாளிகள் நன்றாக குணமடைந்து வருகிறோம் என நம்புகின்றனர்.
சித்தர்களால் கூறப்பட்ட மருந்துகள் நேரடியாக புற்றுநோய் திசுக்களை சென்று தாக்குகிறது. சாதாரணமாக நல்ல திசுக்களை இந்த மருந்துகள் அழிப்பது கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நோயாளிக்கு பரிசோதனைகள் செய்து அவர்களின் உடல் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்கிறோம். வருடத்திற்கு ஒருமுறை தேவைப்படும் போது அவர்களுக்கு மீண்டும் ஸ்கேன் செய்ய அறிவுறுத்துகிறோம்.
சித்த மருத்துவத்தில் புற்றுநோய்க்கு நல்ல தீர்வு இருக்கிறது. இதனை எல்லா மாவட்டங்களில் உள்ள புற்றுநோயாளிகளும் பயன்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் எங்களுடைய துறைத்தலைவர் மைதிலி ராஜேந்திரன் வருங்காலங்களில் டெலி கன்சல்டேஷனாக புற்றுநோயை அண்ணா மருத்துவமனையில் கொண்டு வந்து, அனைத்து மாவட்டங்களில் இருக்கக்கூடிய நோயாளிகளுக்கும் மையப்படுத்திய இடத்தில், அந்தந்த மாவட்டத்தில் உள்ள சித்த மருத்துவ அலுவலருக்கு மருந்துகளை அனுப்பி வைக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்.
புற்றுநோய்க்கு தேவையான அனைத்து உயரிய மருந்துகளையும் தங்கு தடை இல்லாமல் அறிஞர் அண்ணா மருத்துவமனைக்கு தமிழ்நாடு அரசு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த வாய்ப்பினை புற்றுநோயாளிகள் பயன்படுத்தி பயன் பெற வேண்டும். நாடி பிடித்து பார்த்து, வாதம், பித்தம், கபத்தின் அளவினை நம்மால் கண்டறிய முடியும். அந்த காலத்தில் அப்படிதான் செய்தனர். அவர்களுக்கு கப குற்றம் மற்றவற்றை விட அதிகமாக தென்படும். கபம் ஓங்கி இருக்கும் போது அது தீராத நோயின் குறி குணமாக இருக்கும். தற்போதைய நவின மருத்துவத்தால் நோயாளி வரும் போதே அதற்குரிய பரிசோதனைகளை எடுத்துக் கொண்டு தான் வருகின்றனர். அதனால் நோயை கண்டறிவது எங்களுக்கு சிரமமாக தெரியவில்லை.
சித்த மருத்துவத்திலும் பரந்துரைக்கப்படும் ரேடியேஷன், ஹீமோதெரபி: புற்றுநோய் பிரிவில் 30க்கும் மேற்பட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. நோயின் தன்மை, வீரியத்தை கண்டறிந்து மருந்தை பரிந்துரை செய்கிறோம். ரேடியேஷன் என்பது புகை வெளியில் இருந்து நோயினை அகற்றுவது. அதேப்போல் ஹீமோதெரபி என்பது கெமிக்கலை உள்ளே செலுத்துவது. சித்த மருத்துவத்திலும் ஹீமோதெரபி உள்ளது. இயற்கையில் இருந்து சேகரிக்கப்பட்ட ரசாயனங்களை மருந்துகளாக செய்து அதனை மக்களுக்கு கொடுக்கிறோம். அதனால் அளவுக்கு அதிகமாக வளர்ந்துள்ள செல்களை அழிக்கிறது. புற்றுநோய் சிகிச்சைக்கு சித்தாவில் 100 சதவீதம் வழி இருக்கிறது. சித்தர்கள் உடைய வாக்கு என்றும் பொய்க்காது. பணத்துக்காக அவங்க எதையுமே செய்யவில்லை.
அவர்கள் மனித சமுதாயம் நல்லா இருக்கணும்னு ஒரே காரணத்துக்காக லட்சக்கணக்கான மருந்துகளை கொடுத்து இருக்கின்றனர். கபசூர குடிநீர், நிலவேம்பு கசாயம் என்பது கோவிட், டெங்கு பாதிப்பின் போது கேடயமாக பயன்பட்டது. ஒரு கடலில் ஒரு சிப்பியை கூட இன்னும் எடுக்கவில்லை, அந்த அளவிற்கு மருந்துகளும் முறைகளும் சித்தர்களால் சொல்லப்பட்டு இருக்கிறது. மூலிகைகள் கிடைப்பதில் 100 சதவீதம் சிரமங்கள் இருக்கிறது.
சித்தர்களின் வழியில் நடைபெறும் சிகிச்சை: 'வேர்பாரு தழை பாரு மெல்ல மெல்ல பற்ப செந்தூரம் பாரே' என்ற சித்தர்களின் கூற்றுப்படி நோயாளிக்கு மருத்துவம் செய்யும் போது, முதலில் மூலிகையின் வேரினால் செய்த மருந்துகளைக் கொடுக்க வேண்டும். வேரினால் செய்த மருந்துகளால் நோய் குணமாகவில்லை என்றால் மூலிகையின் மற்ற பாகங்களையோ அல்லது முழுத் தாவரத்தையோ பயன்படுத்த வேண்டும் என்கிறார். மூலிகை மருந்துகளால் நோய் குணமாகாவிடில் உலோக, உபரச மருந்துகளைக் கொண்டு தீர்க்க முயல வேண்டும் என்பதே சித்தர்களின் கோட்பாடு ஆகும்.
இயற்கையாக சேகரிக்கப்பட்ட ரசாயனங்களின் மூலம் மருந்துகளை செய்து கொடுக்கிறோம் . அப்படி இருக்கும் போது ஒரு பஸ்பம் அரிசி அளவு தான் கொடுக்கப் போகிறோம். எனவே அதன் அளவு மிகவும் குறைவு அதனை எளிதில் நோயாளிகளாலும் எடுத்துக் கொள்ள முடியும். பற்ப செந்தூரங்கள் இயற்கையான மலைகளில் இருந்தும் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கக்கூடியது. அது தட்டுப்பாடின்றி இந்நாள் வரை கிடைக்கிறது. எனவே புற்றுநோய்க்கான மூலிகைகள் கிடைப்பதில் சிரமம் இருக்கும் என்று சொல்ல முடியாது" என்று கூறினார்.
இதையும் படிங்க: சென்னையில் கெமிக்கல் கம்பெனியில் சோதனை; அரசியல் பின்புலம் எதுவும் இல்லை - வருமான வரித்துறை!