சென்னை: தமிழ்நாட்டில் சமீபத்தில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ரவுடிகளை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகள் காவல்துறை சார்பில் எடுத்து வருவதாக கூறப்பட்டாலும், கோவையில் நீதிமன்றம் அருகே வாலிபர் வெட்டி கொலை, தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் அருகே கொலை என தொடர்ச்சியாக கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
முன்விரோத கொலை, ரவுடிகள் மோதல் உள்ளிட்ட சம்பவங்களை காவல்துறையினர் முன் கூட்டியே கண்டறிந்து தடுக்க தவறியதால் தொடர்ச்சியாக கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது. இது ஒரு புறமிருக்க ரவுடிகள் காவல்துறையினரை தாக்கும் சம்பவங்களும் தமிழ்நாட்டில் அதிகரித்து கொண்டே செல்கிறது.
ஆலந்தூரில் தவறை தட்டிக்கேட்கச் சென்ற ஆயுதப்படை காவலர் விஜயன் என்பவரை ஒரு கும்பல் தாக்கியதில் பலியானார். எழும்பூரில் காவலர் மீது தாக்குதல், போன்ற சம்பவங்களும், குற்றவாளிகளை பிடிக்கும் போது காவலர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடிய சம்பவங்களும் நடந்தேறி வருகிறது.
இதனை தடுப்பதற்காக குற்றவாளிகளை பிடிக்கும் போது காவல்துறையினர் கட்டாயம் துப்பாக்கி கொண்டு செல்ல வேண்டும் எனவும் குற்றவாளிகள் தாக்கும் போது துப்பாக்கி பயன்படுத்த தயங்க கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இதனால் போலீசார் தற்காப்புக்காக குற்றவாளிகளை துப்பாக்கியால் சுடும் சம்பவமும் நடந்து வருகிறது.
அந்த வகையில் கோவை நீதிமன்றம் அருகே கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு குற்றவாளிகளை பிடிக்க முயன்ற காவலரை அவர்கள் வெட்டியதால், உதவி ஆய்வாளர் இருளப்பன் அவர்களின் காலில் சுட்டு கைது செய்தார். அடுத்தபடியாக திருச்சியில் இரண்டு குற்றவாளியிடம் இருந்த நகைகளை மீட்க சென்ற இடத்தில், அரிவாளால் இரு காவலர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களை வெட்டியதால் தற்காப்புக்காக காலில் சுட்டு கைது செய்தனர்.
இதே போல ஒரு சம்பவம் சென்னையில் இன்று அரங்கேறியுள்ளது. அயனாவரம் பகுதியில் கடந்த 20 ஆம் தேதி வாகன தணிக்கை பணியில் ஈடுபட்ட அயனாவரம் உதவி ஆய்வாளர் சங்கரை 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று இரும்பு ராடால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக அயனாவரம் உதவி ஆணையரின் தனிப்படை போலீசார் அஜித், கௌதம் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் முக்கிய குற்றவாளியான சூர்யாவை திருவள்ளூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து நேற்று போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சூர்யாவை அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லும் வழியில், சிறுநீர் கழிக்க வேண்டும் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் நியூ ஆவடி சாலையில் ஆர்டி.ஓ அருகே போலீசார் வாகனத்தை நிறுத்தி ஒரு கைவிலங்கை கழட்டி கீழே இறக்கி விட்டுள்ளனர். அப்போது திடீரென சூர்யா கரும்பு ஜூஸ் கடையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தலைமை காவலர் சரவணகுமார் மற்றும் காவலர் அமானுதீன் ஆகியோரை வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார்.
காவலர்களின் சத்தம் கேட்டு வாகனத்திலிருந்த ஓடி வந்த பெண் உதவி ஆய்வாளர் மீனா கத்தியை கீழே போடும் படி பல முறை எச்சரித்த போதும் கேட்காததால், துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டுள்ளார். இருந்த போதிலும் சூர்யா கத்தியை எடுத்து வெட்ட முயன்ற போது, அவரது இடது காலில் உதவி ஆய்வாளர் மீனா சுட்டு அவரை பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதன்முறையாக சாதுர்யமாக துப்பாக்கி சூடு நடத்தி குற்றவாளியை பிடித்த பெண் உதவி ஆய்வாளருக்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இவ்வளவு பாராட்டுக்கு சொந்தகாரரான பெண் உதவி ஆய்வாளர் மீனா பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவரான மீனா. இவருக்கு திருமணம் நடைபெற்று கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னை புரசைவாக்கம் நம்மாழ்வார்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே காக்கி உடை மீது ஆசை கொண்ட மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு காவலராக தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார்.
பின்னர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்த மீனா 2016 ஆம் ஆண்டு எஸ்.ஐ தேர்வில் தேர்ச்சி பெற்று தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிக்கு சேர்ந்தார். சில பெண் காவல்துறை உயரதிகாரிகளின் ஈர்ப்பால் துணிச்சலாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்யும் மீனாவுக்கு, குற்றப்பிரிவில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
கீழ்ப்பாக்கம் துணை ஆணையரின் தனிப்படையில் பணியாற்றிய மீனா தற்போது உதவி ஆணையரின் தனிப்படை பிரிவில் பணியாற்றி வருகிறார். சிறப்பாக செயல்பட்டு செல்போன் மற்றும் செயின் வழிப்பறி கொள்ளையனை கைது செய்ததற்காக 2 முறை காவல் ஆணையரிடம் மீனா பாராட்டையும் பெற்றுள்ளார்.
கடந்த மாதம் அயனாவரம் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது, ஊர்வலத்தில் சிலர் சாலையில் சேவல் சண்டை விட்டிருந்தனர். இதை தட்டிக்கேட்க சென்ற உதவி ஆய்வாளர் மீனா மற்றும் காவலர் திருநாவுக்கரசை அந்த கும்பல் தாக்கியது. இதனால் ரவுடிகள் தாக்குதலின் வலி குறித்து நன்கு அறிவதால், சக காவலர்கள் வெட்டு காயத்தில் துடித்த போது தற்காப்புக்காக ரவுடி சூர்யாவை சுட்டு பிடித்ததாக எஸ்.ஐ மீனா தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த சம்பவத்திற்கு மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: துப்பாக்கிச் சூடு நடத்திய முதல் பெண் எஸ்.ஐ. - சென்னையில் நடந்தது என்ன?