கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியைச் சேர்ந்த ஜெயா என்பவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ”எங்கள் பகுதியைச் சேர்ந்த பால் என்பவர், அவரது மனைவி ரத்னாபாயுடன் சேர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு ஏழு லட்சம் ரூபாய் பணத்தை எங்களிடமிருந்து கடனாகப் பெற்றார்.
தொடர்ந்து, அந்தப் பணத்தை திருப்பித் தராமல், காவல் துறை உதவியுடன் எனது கணவர் அலெக்ஸை அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் வைத்து கடுமையாகத் தாக்கியதுடன், கட்டாயப்படுத்தி வேறு இடத்துக்கு எங்களை அப்புறப்படுத்தினர். இதுபோன்று மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், பணமோசடிக்கு ஆதரவளித்து மனுதாரர்களை காவல் துறையினர் தாக்கியுள்ளது மருத்துவ அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், மனித உரிமை மீறல் செயலில் ஈடுபட்ட அஞ்சுகிராமம் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்களான கென்னடி, டேவிட் ஜெயசேகரன் ஆகியோருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அவர் உத்தரவிட்டார்.
மேலும், அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அடுத்த எட்டு வாரங்களில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலர் வழங்க வேண்டுமெனவும், காவல் உதவி ஆய்வாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டி அரசுக்கு பரிந்துரைத்தும் அவர் உத்தரவிட்டார்.