சென்னை: காவலர் குடியிருப்பு ஒன்றில் ஒதுக்கப்பட்ட வீட்டைக்காலி செய்யும்படி 2014ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து காவல் துறையைச் சேர்ந்த மாணிக்கவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் இன்று (ஜூன் 14) விசாரணைக்கு வந்தது. அப்போது, 2014ஆம் ஆண்டிலேயே இடத்தை காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டு, அதை உயர் நீதிமன்றம் உறுதி செய்த பிறகு இந்த ஆண்டு தான் இடத்தை காலி செய்திருப்பதாகவும், அதன் காரணமாக அவர் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கப்படவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
'ஆர்டர்லி' என்ற பெயரில் அதிகார துஷ்பிரயோகம்: தொடர்ந்து நீதிபதி கூறுகையில், உயர் அலுவலர்கள் தங்களுக்கு கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால் காவல் துறை நன்மதிப்பை இழக்க நேரிடும் என்றார். மக்கள் மத்தியில் காவல் துறை மீது ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், உயர் அலுவலர்கள் தங்கள் வீடுகளில் 'ஆர்டர்லி' என்ற பெயரில் காவல் துறையினரை துஷ்பிரயோகம் செய்வது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், ஆனால் அரசால் அவை கவனிக்கப்படாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இவற்றில் பல குற்றச்சாட்டுகள் பொது வெளியில் கிடைத்தாலும், அரசாங்கத்தால் கவனிக்கப்படாமல் அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது. பொதுத்தளத்தில் தகவல்கள் இருக்கும்போது, காவல் துறை உயர் அலுவலர்களின் அதிகார துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்தவும், அவர்களின் தலைமையின் கீழ் செயல்படுபவர்களின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும், சமூகத்தில் பொது ஒழுங்கை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அரசு அறிக்கை அளிக்க உத்தரவு: இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சமீப நாட்களில் அதிகரித்துள்ளது. இவற்றை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் இவை சீரழிவுக்கும், அரசியலமைப்பு மீறலுக்கும் வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார்.
மேலும், காவல் துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்தும் அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: 'மகனை போலீசார் அடித்து கொன்றுள்ளனர்' - ராஜசேகரின் தாய் பேட்டி!