சென்னை அருகே கே.கே. நகர் கிழக்கு வன்னியர் தெருவைச்சேர்ந்தவர் முனிசாமி(49). இவர் அமைந்தகரையில் லேத் ஒர்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 1ஆம் தேதி முனிசாமி தனது குடும்பத்துடன் அரக்கோணத்தில் உள்ள சோழிங்கர் கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றார்.
பின்னர் தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று காலை முனிசாமி வீட்டிற்கு வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே முனிசாமி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலின் பேரில் கே.கே. நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மகனின் பள்ளிப்படிப்புக்காக பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சம் மற்றும் 20 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இதேபோல கடந்த மாதம் 14ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சிமென்ட் ஜன்னலை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.7 ஆயிரத்தை ஒரு கும்பல் திருடிச்சென்றது குறிப்பிடத்தக்கது.