மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று (ஜுன்.17) டெல்லியில் வைத்து சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை சென்னைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். இதனையடுத்து சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் சுஷில் ஹரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சொகுசு அறையை சிவசங்கர் பாபா அடையாளம் காட்டினார். இதற்கு முன்பு பள்ளியில் காவல் துறையினர் சோதனை நடத்திய போது, இந்த அறையை ஆசிரியர்கள் மறைத்து வைத்துள்ளனர்.
குறிப்பாக சிவசங்கர் பாபா காண்பித்த சொகுசு அறையை சோதனை நடத்தி, ஹார்ட் டிஸ்குகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததற்கான பதிவுகள் ஏதேனும் உள்ளதா என சோதனை செய்து வருகின்றனர். மேலும் பாபாவின் சொகுசு அறைக்குள் இனி ஒருவரும் நுழையாத படி சீல் வைத்துள்ளனர்.
பள்ளி மாணவிகளை பாபாவின் அறைக்கு அழைத்துச் சென்ற கருணா, சுமித்ஷா, நீரஜ் ஆகிய 3 பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சிவசங்கர் பாபாவை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும், இன்று (ஜுன்.18) மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் வழிப்பறி