செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11, 12ஆம் வகுப்பு ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்தவர்கள் நாகராஜ், புகழேந்தி. 50 வயதை கடந்த இவர்கள் தங்களுக்கு கீழ் பயிலும் மாணவிகளிடம் 2012 ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
செல்போனில் ஆபாச படங்களை காண்பிப்பது, பாலியல் சீண்டல்கள் செய்வது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில், இவர்கள் மீது செங்கல்பட்டு டவுண் காவல் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இந்த வழக்கை கடந்த 2018 ஆம் ஆண்டு விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம் , குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் போதிய ஆதாரம் இல்லாமல் உள்நோக்கத்தோடு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்து விடுதலை செய்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒரு சாட்சியம் இருந்தாலே போதுமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றும், இந்த வழக்கில் நான்கு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. எனவே, இரண்டு ஆசிரியர்களின் விடுதலையை ரத்து செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், கீழ் நீதிமன்றம் விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும், ஆசிரியர்கள் இருவரும் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பளித்தார்.
இவர்களுக்கான தண்டனை விபரங்கள், இன்று(பிப்.25) அறிவிக்கப்படும் எனவும், அப்போது இருவரையும் ஆஜர்ப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி இன்று இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் நீதிபதி வேல்முருகன், தண்டனை குறித்தும் குற்றவாளிகள் ஏதேனும் கூற விரும்பம் உள்ளதா? என கோரினார். இதற்கு பதிலளித்த முதல் குற்றவாளி நாகராஜ், தன்னை பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கில் சிக்க வைத்ததாகவும், தனக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை தான் நிரபராதி எனவும், அரசின் நல்லாசிரியர் விருது பெற்றதாகவும் தெரிவித்தார்.
இரண்டாவது குற்றாவளியான புகழேந்தி சக ஆசிரியர்களுக்கு இடையே இருந்த போட்டியில் தன்னை பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கில் தன்னை சிக்கவைத்தாகவும், தான் நிரபராதி எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து தண்டனை தொடர்பாக குற்றவாளிகள் தரப்பு வழக்குரைஞர்கள் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பிறகு, முதல் குற்றவாளி ஆசிரியர் நாகராஜூக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும், 24 ஆயிரம் ரூபாய் அபராதமும், இரண்டாவது குற்றவாளியான புகழேந்திக்கு மூன்று ஆண்டுகள் சிறையும், 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பையடுத்து குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் பார்க்க: தலைநகரில் வன்முறை: 144 தடை உத்தரவு!