தமிழ்நாட்டில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தற்போது வெளிவந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த முருகேஷ் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, கூடுதல் காவல் துறை இயக்குநர், மாநில குற்ற ஆவண காப்பகம் அளித்துள்ள தகவல்களின் மூலம் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
கூடுதல் காவல் துறை இயக்குநர் அலுவலகம் அளித்துள்ள கடிதத்தின்படி, தமிழ்நாடு முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் பள்ளிகளில் நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், 2000 முதல் 2005ஆம் ஆண்டு வரை வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. 2006ஆம் ஆண்டில் 2 பாலியல் வழக்குகளும், 2007 மற்றும் 2008ஆம் ஆண்டில் தலா ஒரு வழக்கும், 2010 ஆண்டில் 3 வழக்குகளும், 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் தலா 4 வழக்குகளும், 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் தலா 16 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
கடந்த 2015ஆம் ஆண்டு 19 வழக்குகளும், 2016ஆம் ஆண்டு 23 வழக்குகளும், 2017ஆம் ஆண்டு 15 வழக்கும், 2018ஆம் ஆண்டு 25 வழக்குகளும், 2019ஆம் ஆண்டு 35 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டில் பள்ளிகளில் பாலியல் வன்முறையும், மாணவர்கள் மீதான துன்புறுத்தலும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
அதேபோல், தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சிறுவர்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2004ஆம் ஆண்டில் 116ஆக இருந்த சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் 2019ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 410ஆக உயர்ந்துள்ளது.
அதிலும் குறிப்பாக, 2014ஆம் ஆண்டுக்கு பின்னர் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதை மாநில குற்ற ஆவண பதிவேட்டில் இருந்து அளிக்கப்பட்ட தகவல்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. பள்ளிகளில் பயிலும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தல் அதிகரித்துள்ளது பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்: பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு