சென்னை: சென்னை விமானநிலையத்தில் ரூ. 46.29 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் மற்றும் ரூ. 95.44 லட்சம் மதிப்பிலான 2.09 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருவாய் புலான்ய்வு இயக்குநரக (DRI) அலுவலர்களிடமிருந்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய்க்குச் செல்ல வந்த பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் தீவிரமாகச் சோதனை செய்தனர்.
அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஹரேஷ் பத்துமால் கங்வானி என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து பயணியின் உடைமைகளைச் சோதனை செய்தபோது அவரது உடமையின் கைப்பிடிகளில் ரூபாய் 46.29 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டுப் பணம் (யுஏஇ) மறைத்துக் கடத்தி செல்வது தெரியவந்தது. அவரை கைது செய்த சுங்கத்துறை அலுவலர்கள் வெளிநாடு பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் நேற்று (பிப். 19) காலை ஃபிளை துபாய் விமானத்தில் துபாயிலிருந்து வந்த பயணிகள் அனைவரும் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது ஐந்து பயணிகள் தங்களின் உடைமைகளில் 1.4 கிலோ தங்கக்கட்டிகளை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது.
அதன் மதிப்பு ரூ. 64.82 லட்சமாகும். பின்னர் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட 5 பயணிகளையும் கைதுசெய்து யாருக்காகக் கடத்தி வரப்பட்டது. இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து சுங்கத்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், டிஆர்ஐ அலுவலர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், துபாயிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தைச் சோதனை செய்தபோது விமானத்தின் இருக்கையின் அடியில் ரூ. 30.62 லட்சம் மதிப்பிலான 692 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சுங்கத்துறை அலுவலர்கள் தங்கத்தைக் கடத்தி வந்து விமானத்தின் இருக்கையில் மறைத்து வைத்துச் சென்ற ஆசாமி குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் ரூ.47 லட்சம் மதிப்புடைய 1.06 கிலோ தங்கம் பறிமுதல்