சென்னை: தாம்பரம் ஆணையரக எல்லைக்குட்பட்ட மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் எக்ஸ்போர்ட் பிராசசிங் சோனில் உள்ள பார்மா செல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலிருந்து கடந்த 18ஆம் தேதி ஜெர்மன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 14,400 கிலோ மருந்து பொருட்களை கன்டெய்னர் லாரியில் ஏற்றி துறைமுகத்திற்கு அனுப்பியதில் 4,800 கிலோ எடை குறைவாக மருந்துப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
பார்மா செல் நிறுவனம் கன்டெய்னர் லாரியைப்பார்த்தபோது சீல் உடைக்கப்படாமல் நூதன முறையில் ரூ.98 லட்சம் மதிப்பிலான 4,800 கிலோ மருந்துப்பொருட்கள் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, நிறுவனம் சார்பில் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் தாம்பரம் துணை ஆணையர் சிபிசக்ரவர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தேடி வந்த நிலையில் கன்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் மூலம் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், மாறன்(எ) இளமாறன், சிவபாலன், வட சென்னையைச்சேர்ந்த கார்த்திக், முனியாண்டி, ராஜேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.
விசாரணையில் இந்த கும்பல் கன்டெய்னர் சீலை அகற்றாமல் மேலே மற்றும் கீழே உள்ள அச்சாணிகளை கழற்றி விட்டு ஒரு பகுதியைத் திருடிவிட்டு மீண்டும் புதிய போல்ட்டுகளை போட்டுவிட்டுச்சென்றுள்ளனர். திருடிய பொருட்களை மீஞ்சூர் அருகிலுள்ள கவுண்டர்பாளையத்தில் சங்கர் மூலமாக பதுக்கி வைத்து முனியாண்டி, ராஜேஷ் மூலம் விற்று வந்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த கும்பல் தாம்பரம் மெப்சில் இருந்து ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்களையும், ஆம்பூரில் இருந்து கன்டெய்னரில் கொண்டு வரப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்புள்ள 3000 ஜோடி காலணி(ஷூ), திருப்போரூர் அருகிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 1,100 யமஹா கீபோர்டு ஆகியவற்றைத் திருடியது தெரியவந்தது.
மேலும் ஆம்பூரில் ஷூ கம்பெனியில் இருந்து 1800 ஜோடி ஷூக்களும், ஆந்திரா, தடாவில் இருந்து 1000 ஷூக்களும் திருடியது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களைச் சந்திந்துப் பேசுகையில், 'தாம்பரம் மெப்சில் உள்ள ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பார்மா செல் வெளிநாட்டிற்கு அனுப்பும் பொருட்கள் திருடப்பட்டதாகவும்; கடந்த 18ஆம் தேதி காணாமல் போனதாகவும் புகார் வந்தது.
அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் ஓட்டுநர்கள் மூலம் குற்றவாளிகள் 7 பேரைக் கைது செய்து விசாரித்ததில் இது போன்று பல திருட்டுச்சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இளமாறன் என்பவர் ஆரம்பத்தில் டீசல் திருடி விற்று வந்தபோது, பெரிய அளவில் திருடி வாழ்க்கையில் செட்டில் ஆக எண்ணி திட்டமிட்டு சிலரை சேர்த்துக் கொண்டு திருடியுள்ளார்.
திருடிய சில பொருட்களை விற்க முடியாமல் இருந்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகிறோம்.
இதையும் படிங்க:நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய இருவர் மீண்டும் சிறையிலடைப்பு