அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதற்குப் பணம் பெற்றதாகப் புகார் எழுந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் இதுதொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஜுன் 12 அன்று சோதனை நடத்தியது. குறிப்பாக, சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
இதையடுத்து ஜுன் 13 அதிகாலை செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது இதய ரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் (ஜுன் 15) தாக்கல் செய்தார். நீதிபதிகள் நிஷா பானு, பரதச் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அமைச்சர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், எவரொருவரையும் கைது செய்வதற்கான நடைமுறைகளைப் பின்பற்றப்பட வில்லை என்று தெரிவித்தார். செந்தில் பாலாஜியை வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆட்கொணர்வு மனு மூலம் ரிமாண்ட் செய்யப்பட்டதை எதிர்க்க முடியாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டினார். மேலும், சட்ட விரோதப் பண பரிமாற்ற தடுப்புச்சட்டத்தின்கீழ் வரும் வழக்கில் சாதாரண குற்றவியல் நடைமுறைச் சட்டம் பொருந்தாது என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமைச்சரின் உடல் நலக் குறைபாடு தொடர்பாக அரசு மருத்துவர்கள் அளித்த பரிந்துரையை சந்தேகிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்களும் காவேரி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.
மேலும், செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூன் 22ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது. மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த 8 நாட்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் இன்று விசாரணை மேற்கொள்ள வர உள்ளனர்.
குறிப்பாக மருத்துவமனையிலேயே எந்தவித தொந்தரவும் தராமல் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறையினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். குறிப்பாக 50க்கும் மேற்பட்ட கேள்விகளை அமலாக்கத்துறையினர் தயார் செய்து ஆம், இல்லை என்ற முறைகளில் மட்டுமே செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் செந்தில்பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா வங்கி கணக்கில் 1.60 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதே போல சட்டவிரோதப் பணபரிமாற்றம் மூலமாக சொத்துக்களாக வாங்கப்பட்டதா என விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.