சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மனித சிவில் உரிமை கழகம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று (ஜூன்.27) நடைபெற்றது. அப்போது மூத்த வழக்கறிஞர்கள் NGR பிரசாத், வைகை, சுரேஷ், நாகசய்லா, சமூக ஆர்வலர்கள் ஜெயராம், தீபக் ஆகியோர் பேசியபோது, "குஜராத் கலவரத்தின் தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்து வழக்கிற்கு உறுதுணையாக இருந்த பத்திரிக்கையாளரும், சமூக ஆர்வலருமான தீஸ்தா செதல்வாதை குஜராத் காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விசாரணை என்றால் சம்மன் அனுப்பினால் வரும் சமூக ஆர்வலரை கைது செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் குஜராத் கலவர வழக்கின் தீர்ப்பு வந்த சில மணி நேரங்களில் அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்த சமூக ஆர்வலரை கைது செய்யப்பட்டுள்ளார். இனி யாரும் சமூக அநீதியை முன் நின்று கேட்க கூடாது, கேட்டால் பயங்கரவாதியாகச் சித்தரிப்போம் என்பது போல் உள்ளது.
சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாதை கைது செய்திருப்பது, குஜராத் கலவர வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஜனநாயக பூர்வமாக யாரும் செயல்பட முடியாத நிலையை ஏற்படுத்தியிருப்பதாகவும், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் இந்த தீர்பில் எந்த நீதிபதியின் தீர்ப்பின் விவரம் அதிகம் உள்ளது என்ற பெயர் கூட இல்லாமல் தீர்ப்பில் வெளியிடப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர்கள் கூறினர்.
பின்னர் பதாகைகள் ஏந்தி சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாதை கைது செய்ய காரணமாக இருந்த மத்திய அரசையும், குஜராத் அரசையும் கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதையும் படிங்க: குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி