கரோனா ஊரடங்கின் காரணமாக இறுதியாண்டு பருவத் தேர்வை தவிர, மற்ற அனைத்துப் பருவத் தேர்வுகளையும் ரத்துசெய்துள்ள நிலையில், மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் தேர்வு கட்டணம் செலுத்த அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் உத்தரவிட்டிருந்தார்.
தேர்வு கட்டணம் செலுத்த நிர்பந்திக்கக் கூடாது என அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பயிலும் ஹரிஹரன், சௌந்தர்யா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அனைத்து மாணவர்களின் தேர்வு முடிகளையும் வெளியிட வேண்டும் எனவும், தேர்விற்காகச் செலவிடப்பட்ட தொகையை விவரங்களுடன் தெரிவிக்க வேண்டுமென்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
தேர்வு நடைமுறைகளுக்கான செலவினங்கள் குறித்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர். கருணாமூர்த்தி சார்பில் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத் பதில் மனுவாக தாக்கல்செய்தார்.
அதில், "ஒவ்வொரு செமஸ்டர் தேர்விலும் ஒரு மாணவர் 9 பாடங்களுக்கு தேர்வை எழுத வேண்டும். அதன்படி இந்த செமஸ்டர் தேர்வு 4 லட்சம் மாணவர்கள் என்ற அடிப்படையில் 37 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டு அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒரு தேர்வுக்கு ஒரு மாணவருக்கான கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் தயாரிப்பதற்கான ஊதியம், ஆய்வக செலவுகள், இணையதள இணைப்பு, மதிப்பெண் சான்றிதழ் என 148 ரூபாய் செலவிடப்படுவதாகவும், அதற்கேற்ப ஒரு தேர்வுக்கு 150 வீதம் கட்டணமாக வசூலிக்கப்பட்டதாகவும், 2020 ஏப்ரல் மாதமே தேர்வுகள் வழக்கம் போல நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில், விடைத்தாள் திருத்தும் செலவை தவிர மற்ற அனைத்தும் முடிந்துவிட்டதாகவும், அதன்படி ஒரு மாணவரின் ஒரு தேர்வுக்கு தற்போது 126 ரூபாய் 10 காசுகள் செலவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணம் நியாயமானதுதான் எனவும், அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படவில்லை எனவும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இக்கட்டணத்தை மாணவர்களுக்குத் திருப்பிச் செலுத்த உத்தரவிட்டால் பல்கலைக்கழகத்துக்கு நிதி சுமையை ஏற்படுத்துவதோடு, தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதால் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.