சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசினார். அப்போது பதிலுரையின் நிறைவில் அவர், “முல்லா என்பவர் ஊர் ஊராக நடந்து பயணம் செய்து கொண்டிருந்தார். அவரின், உறவினர் ஒருவர் ஒரு கழுதை வாங்கி வைத்துக் கொண்டால் பயணம் செய்ய எளிதாக இருக்கும் என்று ஆலோசனை வழங்கினார். அதனால் முல்லாவும் ஒரு கழுதை வாங்கி வைத்துக் கொண்டு, கழுதை மேல் ஏறி பயணம் செய்து வந்தார்.
அவர் செல்லும் வழியில், அவரை பலர் கூப்பிட்டுப் பார்த்தனர். ஆனால், அவர் கண்டும் காணாதது போல் கடந்து சென்றுள்ளார். ஒரு நாள் அவருடைய நண்பர் ஒருவர் அவரை வழிமறித்து நிறுத்தி, "நாங்கள் எவ்வளவோ முறை கூப்பிட்டும் நீங்கள் ஏன் கண்டு கொள்ளாமல் செல்கிறீர்கள்...?" என்று கேட்டார்.
அதற்கு, "ஓ நீங்கள் என்னை கூப்பிட்டீர்களா... எனக்கு தெரியவில்லை. ஏனெனில், இந்த கழுதை நான் சொல்வது எதையும் கேட்பதில்லை. நான் ஒரு இடத்துக்கு போக சொன்னால், அது பாட்டுக்கு வேறொரு இடத்துக்கு செல்கிறது.
எனவே, நான் நினைத்த பாதையில் போக முடியவில்லை. எனவே, கழுதை போகும் போக்கில் செல்லலாம் என சென்று கொண்டிருக்கிறேன்" என்றார் முல்லா... என்று கதையை நிறைவு செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ, "இப்படி தான் இன்னொருவரின் ஆலோசனையை கேட்டு இன்று சிலர் நடந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் யார் ஆலோசனையை கேட்டு நடந்தாலும், 2021ஆம் ஆண்டில் 234 தொகுதிகளிலும் வென்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்" என்று சொன்னதும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மேசையை தட்டி சிரித்தனர்.
அமைச்சர் செல்லூர் ராஜூ இந்த கதையை சொன்னபோது திமுக உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.