சென்னை எம்ஜிஆர் நகர் காந்தி தெருவில் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தி.நகர் காவல் துணை ஆணையருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை அமைத்து, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆக.14) பாரதி நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றுத்திரிந்த நெசப்பாக்கத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவர் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருவதும், தற்போது ஊரடங்கை பயன்படுத்தி உணவு டெலிவரி செய்வது போல கஞ்சா மற்றும் மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதற்கு உடந்தையாக இருந்த மதுரவாயலைச் சேர்ந்த பாஸ்கர், நெசப்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் குமார் ஆகியோரையும் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், செல்போனில் ஆர்டர் கொடுக்கும் நபர்களுக்கு கஞ்சா, மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
அவர்களிடமிருந்து 380 கிராம் கஞ்சா, 10 மதுபாட்டில்கள், இரண்டு இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு!