சென்னை: கரோனா தொற்று அச்சம் காரணமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில், விநாயகர் சிலைகளை வைப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பாஜக, இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துவருகின்றன.
இந்நிலையில், இன்று(செப். 4) இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய நாகர்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர். காந்தி விநாயகர் சதுர்த்தி நடத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.
அமைச்சரின் விளக்கம்
இதற்கு பதிலளித்துப் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, " கரோனா மூன்றாம் நிலை உருவாக இருப்பதால் மக்கள் கூடும் வகையில் விழாக்களை நடத்த தடை விதிக்க ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வலியுறுத்தி இருக்கிறார்.
அதன் அடிப்படையில்தான் தமிழ்நாடு அரசு விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தடை விதித்திருக்கிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு இந்த ஆண்டே குடமுழுக்கு நடத்தப்படும் என்றார்.
அதேபோல நாகர்கோவில் தொகுதி கோரிக்கைகள் அனைத்தையுமே செய்து கொடுக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: தடையை மீறி வைக்கப்பட்டிருந்த 21 விநாயகர் சிலைகளைக் கைப்பற்றிய காவல் துறை