தமிழ்நாட்டில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாம்பழங்கள் சென்னை கோயம்பேடு பழ சந்தைக்கு வருகின்றன. மாம்பழங்களை விரைவில் பழுக்கவைக்க கார்பைடு கற்கள் பயன்படுத்தப் படுகிறது என்று புகார்கள் உள்ளன.
இந்த நிலையில் இன்று (ஜூன்.16) மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஷ்சந்திரபோஸ், உணவு பாதுகாப்புதுறை சுந்தர மூர்த்தி, ராமராஜ் தலைமையில் கொண்ட சுமார் 10க்கும் மேற்பட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கோயம்பேடு பழ சந்தையில் தீடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 7 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர்கள் கூறியதாவது, "சென்னையில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற புகார்கள் வந்தன. இந்த புகாரையடுத்து அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 7 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள், கார்பைடு கற்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. பின்னர் பழ வியாபாரிகளுக்கு கார்பைடு கற்களால் பழுக்கவைக்கப்பட்ட பழங்களை உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்" என்றார்.