தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் பறக்கும் படையினரை அமைத்து தமிழ்நாடு முழுவதும் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மீனம்பாக்கம் சுரங்கப்பாதை அருகே மீனம்பாக்கம் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் வாகனத்தை நிறுத்தி சோதனைசெய்தனர். இந்தச் சோதனையில் வாகனத்திலிருந்து 54 லட்சத்தை காவல் துறையினர் கைப்பற்றினர்.
இது குறித்து வாகனத்தில் இருந்தவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் பழவந்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் நகைக் கடையிலிருந்து பணத்தை எடுத்துவந்தாகத் தெரியவந்தது.
அவர்களிடம் உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துவந்ததையடுத்து காவல் துறையினர், ஆலந்தூர் மண்டலத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.