சென்னை: இந்தியத் தொல்லியல் துறையில் பழங்கால சிலைகளைப் பதிவு செய்திருக்கக்கூடிய நபர்களின் விவரங்களைச் சேகரித்த போது, சென்னை ஆர்.ஏ.புரம் முகவரியைக் கொண்ட ஷோபா துரைராஜன் என்பவர் பழங்கால சிலைகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆர்.ஏ.புரம் 7வது பிரதான சாலையில் உள்ள ஷோபா துரைராஜன் என்பவரின் வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அஸ்திர தேவர், அம்மன், வீர பத்ரா, மகாதேவி ஆகிய 7 பழங்கால சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்தனர். கண்டறியப்பட்ட சிலைகள் குறித்து உரிமையாளர் ஷோபாவிடம் விசாரணை நடத்தியபோது, பொழுதுபோக்கிற்காகக் கலைப்பொருட்களைச் சேகரிப்பதாகக் கூறினார்.
சிலைகடத்தல் மன்னன் தீனதயாளன்:மேலும் கடந்த 2005 மற்றும் 2008 ஆம் ஆண்டு பிரபல மறைந்த சிலை கடத்தல் மன்னன் தீன தயாளனின் அபர்ணா ஆர்ட் கேலரியில் சிலைகளை வாங்கியதாகவும், சிலைகளை தொல்லியல் துறையில் பதிவு செய்ததற்கான ஆவணங்களைச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் சமர்பித்தார்.
இவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட நிற்கும் விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி ஆகிய சிலைகளின் கீழ் உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ கோயில் என பொறிக்கப்பட்டிருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டு பிடித்தனர். பின்னர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆதிகேசவ கோவிலுக்கு சென்று விசாரித்த போது கடந்த 2011ஆம் ஆண்டு மர்ம நபர்கள் சிலர் கோவிலுக்கு புகுந்து ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சிலைகளை திருடி சென்றது தெரியவந்தது.
இந்த திருட்டு தொடர்பாக கோயில் அர்ச்சகர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் 2013 ஆம் ஆண்டு கண்டறியப்படாத வழக்காக முடித்து வைக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீண்டும் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவில்களில் இருந்து திருடப்பட்ட 7 சிலைகளில் 3 சிலைகளுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஷிமோகாவில் உள்ள இந்திய தொல்லியல் துறையில் நின்ற பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சிலைகளை மட்டுமே பதிவு செய்திருப்பதும், மீதமுள்ள 4 சிலைகளுக்கு சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் ரசீதுகளை வழங்கி இருப்பதும் தெரியவந்தது.
கோவிலில் இருந்து திருடப்பட்ட சிலைகள் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த சிலைகள் எனவும் சர்வதேச சந்தையில் 5 கோடி ரூபாய்க்கு மேல் இந்த சிலைகளின் மதிப்பு இருக்கும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிலைகளை பறிமுதல் செய்த போலீசார் மீதமுள்ள நான்கு சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானவை என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிலைகள் 2008 ஆம் ஆண்டு ஏ.எஸ்.ஐ-யில் பதிவு செய்யப்பட்டிருப்பது என்பதால் அதற்கு முன் திருடப்பட்ட சிலையாக இருக்கலாம் எனவும் சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 2 கோடியாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 3 சிலைகள் உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ கோவிலில் ஒப்படைக்கப்படும் எனவும் இந்த வழக்கில் மறைந்த சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் தொடர்பிருப்பது என்பதால் அடுத்தக்கட்டமாக அவரது கேலரியின் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:திருப்பத்தூரில் தீண்டாமை கொடுமை? திடீர் சாலை மறியலால் பரபரப்பு!