சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நடிகை விஜயலட்சுமி எழுதிக் கொடுத்ததின் பெயரில், இந்த வழக்கு அப்போதே கைவிடப்பட்டது.
![வீரலட்சுமி வக்கீல் நோட்டீஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/22-09-2023/tn-che-07-seemanissue-photo-script-7208368_22092023180219_2209f_1695385939_285.png)
இந்த நிலையில், கடந்த மாதம் சென்னை வந்த நடிகை விஜயலட்சுமி மீண்டும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார். அதன் பிறகு தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பை நடத்தி வரும் வீரலட்சுமி என்பவருடன் இணைந்து அவரின் ஆதரவோடு சென்னையில் தங்கியிருந்தார்.
![வீரலட்சுமி வக்கீல் நோட்டீஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/22-09-2023/tn-che-07-seemanissue-photo-script-7208368_22092023180219_2209f_1695385939_616.png)
இதையடுத்து விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி இருவரும் சேர்ந்து கொண்டு சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டு வரும் நடிகை விஜயலட்சுமி மற்றும் தமிழர் முன்னேற்றப்படை அமைப்பு தலைவர் வீரலட்சுமி இருவரும் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
![வீரலட்சுமி வக்கீல் நோட்டீஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/22-09-2023/tn-che-07-seemanissue-photo-script-7208368_22092023180219_2209f_1695385939_679.png)
மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் எனவும், ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடாக இருவரும் வழங்க வேண்டும் எனவும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதையடுத்து நடிகை விஜயலட்சுமி இந்த வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு, மீண்டும் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.
மேலும் பெங்களூரில் இருந்து சீமான் மீது 15 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளேன் எனவும் ஒரு வீடியோவை பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், தமிழர் முன்னேற்றப்படை அமைப்பு தலைவர் வீரலட்சுமி, சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்று அனுப்பி உள்ளார்.
அதில், “நான் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர். ஆனால், நான் தெலுங்கு சமூகத்தைச் சேர்ந்தவர் என சீமானும் அவரின் ஆதரவாளர்களும் அவதூறு பரப்பி வருகின்றனர். எனவே, இது தொடர்பாக 15 நாட்களுக்குள் சீமான் பொதுவெளியில் மன்னிப்பு கேட்காவிட்டால், நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்வேன். எனக்கு 2 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடாக வழங்க வேண்டும்” எனவும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதையும் படிங்க: ‘ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்கள் நீதிமன்றத்துக்கு களங்கம் விளைவிக்கவில்லை’ - சவுக்கு சங்கரின் வழக்கை நிராகரித்த தலைமை வழக்கறிஞர்!