சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கல்வி நிலையங்களில் மொழி, இனப்பெருமைகள் ஊக்குவிக்கப்படாமல் ஜாதி, மத, காவி பெருமை ஊக்குவிக்கப்படுவதால்தான் பல வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் மேயர் உட்பட மூன்று நபர்களை வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆதாயத்திற்காக கொலை செய்திருக்கிறார்கள் என காவல் துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சமீபகாலமாக ஏராளமான வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்குள் புகுந்துள்ளார்கள். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்காமல் இருப்பது காவல் துறையின் கையில்தான் உள்ளது" எனத் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு குறித்து அரசு என்ன செய்யமுடியும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, அப்போது அரசாங்கம் எதற்காக நிறுவப்படுகிறது; எதற்குத்தான் பொறுப்பேற்கும்? என்று பதில் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு அரசு பொறுப்பற்ற அரசாக உள்ளதாகவும் விமர்சனம் செய்தார்.
மேலும், கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்து சரியானது என குறிப்பிட்ட சீமான், அது ஒட்டுமொத்த தமிழ்நாடு மாணவர்களின் கருத்து என்றார்.
வைகோ மக்களவை உறுப்பினர் பதவி ஏற்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.