மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து மரங்கள் வெட்டப்படுவதால், அவற்றை பாதுகாக்க நிரந்தர குழு அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், "கன்னியாகுமரி முதல் குஜராத்வரை மேற்குதொடர்ச்சி மலை சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் சதுர கிலோ மீட்டரில் அமைந்திருக்கிறது. சுந்தரவன காடுகள் முதல் கன்னியாகுமரிவரை கிழக்கு தொடர்ச்சிமலை பரந்து விரிந்திருக்கிறது.
இந்த மலைகளில் ஆயிரக்கணக்கில் அரிய வகை மரங்கள், பல்லுயிர்கள் இருக்கின்றன. இதனை, தமிழ்நாடு அரசின் வன பாதுகாப்பு மற்றும் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி சிலர் இந்த மலை தொடர்களில் இருந்து அரிய வகை மரங்களை வெட்டி எடுகின்றனர்.
இதனால், பல்லுயிர்கள் மறைந்துபோகின்றன. மேலும், மலை தொடர்கள் தரிசு நிலங்களாக மாறிவருகின்றன” என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்த மலைகளின் இயற்கை வளங்களையும், பல்லுயிர்களையும் காப்பாற்ற சுற்றுச்சூழல் அறிஞர் மாதவ் காட்கில், விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் ஆகியோரின் பரிந்துரைகளை பின்பற்றி நிரந்தர குழு அமைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட வழக்குகளை தீர்ப்பாயத்தைதான் அணுக வேண்டும் என்பதால் மனுதாரர் பசுமை தீர்ப்பாயத்தை அணுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.