சென்னை: தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “மகாத்மா காந்தியின் மதச்சார்பற்ற கொள்கையை வலியுறுத்தும் விதமாக சென்னை மெரினா கடற்கரையிலுள்ள காந்தி சிலையின் கீழ் ஒருநாள் சத்தியாகிரகம் நடத்த அனுமதி கோரி காவல் துறைக்கு மனு அளிக்கப்பட்டது.
ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தொடர்ந்து கடற்கரை சாலையில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, சத்தியாகிரகத்துக்கு போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கும், தங்கள் வழக்கிற்கும் தொடர்பு இல்லை. காந்தி சிலை அருகில் பல அரசு நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு என்பதால், சத்தியாகிரகத்துக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து, சத்தியாகிரகத்துக்கு அனுமதி வழங்கும்படி உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு அரசும், காவல் துறையும் இரு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 3,000 விவசாயிகளுக்கு செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட்டுகள்