மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யும் முடிவை விரைந்து எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநரை வலியுறுத்தி பிப்ரவரி 14ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கக்கோரி ஓசூர் காவல் துறையினரிடம், தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் நகர செயலாளர் ஹரி பிரசாத் மனு அளித்தார்.
ஆனால், ஆர்ப்பாட்டத்திற்கு ஓசூர் காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, ஹரி பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், ”கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு, காவல் துறையிடம் புதிதாக மனுதாரர் மனு அளிக்க வேண்டும்.
அதைச் சட்டத்திற்குட்பட்டு ஓசூர் காவல் ஆய்வாளர் பரிசீலித்து உரிய முடிவை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.