கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் தாலுகா பொலுவம்பட்டி காப்புக்காடு பகுதியில் வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கார்த்திகை மகாதீபத்தையொட்டி டிசம்பர் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மகாதீபம் ஏற்றவும் பூஜை செய்யவும் அனுமதி வழங்கக்கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவில், "கார்த்திகை மகாதீபம் தினத்தையொட்டி பக்தர்களை அழைத்துச் செல்ல ஏதுவாக அணையா தீபக்குழு அமைக்கப்பட்டு 20 ஆண்டாக பக்தர்களை அழைத்துச் சென்றுவருகிறோம்.
2015ஆம் ஆண்டு முதல் வனத் துறை அனுமதி பெற்று பக்தர்கள் இந்தக் கோயிலுக்குச் சென்றுவருகின்றனர். அதேபோன்று இந்த ஆண்டும் மகாதீபம் எற்றவும் பூஜைகள் செய்யவும் அனுமதிக்கக்கோரி ஆகஸ்ட் 20ஆம் தேதி அரசுக்கு அனுப்பிய மனுவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் எம். சத்யநாராயணன், என். சேஷசாயி அமர்வு, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு மட்டும்தானே தவிர, அவற்றைவிட கொடியவர்களுக்கு (மனிதர்கள்) கிடையாது எனக் கருத்து தெரிவித்தனர்.
மேலும், இவ்வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு, வனத் துறை, அறநிலையத் துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு இவ்வழக்கை நவம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதையும் படிங்க: கரடிகள் தொல்லை; பிடிக்குமாறு மக்கள் கோரிக்கை!