சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ”தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். அரசின் நேரடி நியமனம், ஒப்பந்தங்கள் ஆகியவை மூலம் நியமனம் என இவர்கள் குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துக்கள் ஆகியவறில் பணியாற்றுகிறார்கள்.
மருத்துவர்கள், செவிலியர் போன்று இவர்களும் தன்னலம் கருதாமல் சேவை செய்துவருகிறார்கள். கரோனோ போன்ற உயிர்க்கொல்லி வைரஸ் பரவும் இந்த இக்கட்டான நிலையிலும் தூய்மைப் பணி செய்கிறார்கள். ஆனால், இவர்களுக்குப் போதிய நோய்த் தடுப்பு சாதனங்களோ, உயிர் காக்கும் சாதனங்களோ வழங்கப்படுவதில்லை.
கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கும், செவிலியருக்கும் 50 லட்சம் ரூபாய் காப்பீடு அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு தூய்மைப் பணியாளர்களுக்கென எதுவும் அறிவிக்கவில்லை.
எனவே, அரசாலும் ஒப்பந்த அடிப்படையிலும் நியமிக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்கி, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதையும் படிங்க: 14 வயது சிறுமியின் கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி