தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அனல் பறக்கும் பரப்புரை நடந்து வருகிறது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் நான்கு தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்துவரும் கமல்ஹாசன், மே 12ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதியில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் பெயர் நாதுராம் கோட்சே எனவும் தெரிவித்தார். இந்த பேச்சு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிரொலித்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் வீடு மற்றும் ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது வீடு மற்றும் கட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.