சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தால் வணிக வளாகங்கள், சிறு குறு கடைகள் என குறைந்த வாடகையில் வணிகர்களுக்கு விடப்பட்டுள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் ராஜா அண்ணாமலை மன்றத்திற்கும் எதிரில் உள்ள வடக்குக் கோட்டை சாலையில் சுமார் 300 கடைகள் மாதாந்திர வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இந்த வணிக வளாகத்தில் சுமார் 256 கடைகள் நீண்ட காலமாக வாடகை முறையாக செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை குறிப்பிட்ட 256 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஒவ்வொரு கடைகளிலும் நிலுவையில் உள்ள தொகை குறிப்பிட்டு நோட்டீஸ் வைத்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், நிலுவை வாடகையை செலுத்தியபின் சீல் அகற்றப்பட்டு மீண்டும் இயங்க அனுமதிக்கப்படும் என தெரிவித்தனர்.
குறிப்பாக அனைத்து கடைகளுக்கும் சேர்ந்து மொத்தம் 60 லட்சம் நிலுவையில் உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வாடகைகளை முறையாக வசூலிக்க மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பொறியியல் படிப்பினை முடித்தவர்களுக்கு சென்னை ஐஐடியில் இலவசமாக திறன் பயிற்சி!