சென்னை போரூர் அருகே ராமநாதீஸ்வரர் கோயிலுக்குச்சொந்தமான இடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடையின் உரிமையாளர்கள் கடைக்கு சரிவர வாடகைப்பணம் செலுத்தவில்லை என்பதால் முன்னறிவிப்பு நோட்டீஸ் எதுவும் ஒட்டாமல் அறநிலையத்துறை அலுவலர்கள் திடீரென கடைகளுக்குச் சீல் வைக்க வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர்கள் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அலுவலர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் வாக்குவாதம் முற்றியதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலீசாரின் பாதுகாப்புடன் கடையை சீல் வைக்கும் பணியில் அறநிலையத்துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர்கள் திடீரென போரூர் - குன்றத்தூர் செல்லக்கூடிய சாலையில் அமர்ந்து கொண்டும் படுத்துக்கொண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கடையின் உரிமையாளர்களை போலீசார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
மேலும் முன்னறிவிப்பு எதுவும் இன்றி வாடகைப் பணம் செலுத்தாத 50க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அலுவலர்கள் சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ‘நாகர்கோவிலில் 4 பேருக்கு குரங்கம்மை இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை’ - அமைச்சர் மா. சுப்பிரமணியன்