சென்னை: கடந்த டிச.4-ஆம் தேதி, மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் மிக கனமழையைச் சந்தித்தன. இதனால் மாநகரமே தண்ணீரில் சூழ்ந்து காணப்பட்டது. இதனையடுத்து, மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ள நீரை அகற்றினர். அதேநேரம், எண்ணூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ள நீருடன் எண்ணெய் கழிவு கலந்தது.
இதனால், அப்பகுதி முழுவதுமே எண்ணெய் படலமாக காட்சி அளித்தது. பின்னர், இது தொடர்பான செய்திகள் பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவ, இதனை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. இதன்படி, விரைவாக எண்ணெய் கழிவுகளை வெளியேற்ற வேண்டும் என சிபிசிஎல் நிறுவனத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் இயக்குனர் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையிலான எண்ணெய் விவகாரம் மேலாண்மைக் குழுவானது, எண்ணெய் கழிவுகளை வெளியேற்றும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளது. இவர்களைத் தவிர, தற்போது மும்பையைத் தளமாகக் கொண்ட “சீ கேர் மரைன் சர்வீசஸ்” (Sea Care Marine Services) என்ற நிறுவனமும் கைகோர்த்துள்ளது.
இதன்படி, 6 திறன்மிக்க பயிற்சி பெற்ற நபர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை, 276 பேரல்களில் 48.6 டன் எண்ணெய் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் தோராயமாக 15 டன் எண்ணெய் இருக்கும் என கருதப்படுகிறது. மேலும் எண்ணூர் குப்பம், நெட்டு குப்பம் மற்றும் தாளன் குப்பம் ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இதில் ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி போன்ற வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த மீட்புப் பணியில் 482 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 5 உறிஞ்சும் திறன் கொண்ட லாரிகள், 7 ஜேசிபி, 4 பொக்லைன் மற்றும் 14 டிப்பர் லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், சென்னை ஐஐடி, தண்ணீரில் கலந்துள்ள எண்ணெய்யை மதிப்பிடும் பணியில் இறங்கியுள்ளன. சுகாதாரத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் களத்தில் தயார் நிலையில் தொடர்ந்து இருக்கின்றன” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெள்ள நீரில் கலந்த கச்சா எண்ணெய்யை அகற்றும் பணிகளை டிச.17-க்குள் முடிக்க உத்தரவு!