Ennore power plant: வடசென்னையின் எண்ணூர் பகுதியில் புதிய இரண்டு அனல் மின் நிலையங்கள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ரத்தினம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அனல் மின் நிலையங்கள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
வளங்கள் பாதிக்கப்படும்
பின்னர் செய்தியாளரிடம் பேசிய ரத்தினம், "எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காக இந்தப் போராட்டத்தை எஸ்டிபிஐ கையில் எடுத்துள்ளது. இந்த அணு உலைகள் அமைப்பதை முதலமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கிறோம்.
வடசென்னை பகுதியில் உடல் உழைப்பில் ஈடுபடும் மக்கள் அதிகம் உள்ளனர். எனவே இப்பகுதி மக்களின் வாக்கு எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு மக்களின் உயிரும் முக்கியம். இப்பகுதியில் கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நிலம், நீர், காற்று போன்ற அனைத்து வளங்களும் பாதிக்கப்பட்டுள்ளன" என்றார்.
திட்டத்தைக் கைவிடக் கோரிக்கை
பூவுலகின் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் கூறியதாவது, "வடசென்னை பகுதியில் ஏற்கனவே 3,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான அணு உலைகள் இயங்கிவருகின்றன. இந்த அணு உலைகளிலிருந்து வெளியேறும் சல்பர்-டை-ஆக்சைடால் மனித நுரையீரலுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுவருகிறது.
மேலும் நுரையீரல் சார்ந்த ரெஸ்பெரிடிக்ட் டிசீஸ் என்ற பாதிப்பும் ஏற்பட்டுவருகிறது. இப்பகுதியில் மேலும் அணு உலைகள் அமைக்கப்பட்டால் காற்று மாசுபட்டு நுரையீரல், சுவாச கோளாறு போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஏற்கனவே மத்திய அரசு சல்பர் டை ஆக்சைடை கட்டுப்பாட்டில் கொண்டுவர எஃப்.டி.ஜி. என்ற தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த கோரியுள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் உள்ள எந்த அணு உலையிலும் இந்தத் தொழில்நுட்பம் நிறுவப்படவில்லை. ஏற்கனவே பிரச்சினைகள் அதிகளவில் இருந்துவருகின்றன. புதிய திட்டத்திலும் இந்தத் தொழில்நுட்பம் செயல்படுத்தப்படாது. எனவே வடசென்னையில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மாரிதாஸ் ஒரு ஹீரோ, அதேபோல கிஷோர் கே சாமி... Arjun Sampath சரவெடி .