சென்னை: கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் சதிஸ் என்பவரின் மகள் சிந்து. இவர் தியாகராய நகரிலுள்ள வித்யோதயா மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு 3 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். அதனால் தற்போது நடமாட முடியாத நிலையில் உள்ளார். தோழிகளுடன் விளையாடிய போது, தனது வீட்டின் அருகில் உள்ள கட்டடத்தில் இருந்து தவறி விழுந்ததில், இடுப்புக்கு கீழ் செயலிழந்து முடங்கினார்.
அதனைத்தாெடர்ந்து அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சைப்பெற்று வந்தாலும், முழுவதும் குணமடையாத நிலையில், பெற்றோர்கள் தூக்கிச்சென்று விடும் நிலையில் தான் உள்ளார். இந்நிலையிலும் தனது மனவலிமையால், வாழ்க்கைக்கு கல்வித்தான் முக்கியம் என்பதால், தற்போது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை பள்ளியின் தலைமை ஆசிரியர் துணையுடன் எழுதி வருகிறார்.
மேலும், இருசக்கர வாகனத்தில் தேநீர் விற்கும் தந்தை, குடும்பத்தை கவனிக்கும் தாய் என குடும்ப வறுமையினையும் தாண்டி, வாழ்க்கையில் சாதிப்பதற்குத் தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் துணிவுடன் கூறுகிறார், மாணவி சிந்து.
இவர் குறித்த செய்திகள் வெளியானதைத்தொடர்ந்து, 'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம்!""கடுமையான நெருக்கடிகளின்போதுதான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும்.
விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைகொண்டு, தேர்வுகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். மீண்டும் வாலி பால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச்செலவுகளை அரசே ஏற்கும்” என அறிவித்திருந்தார்.
இது குறித்து மாணவி சிந்து கூறும்போது, ”எனது மருத்துவச்செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது கனவையும் நிறைவேற்றுவதாக கூறியுள்ளதுடன், மீண்டும் வாலி பால் விளையாட முடியும் என நம்பிக்கை அளித்துள்ள முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 2 ஆண்டுகளாக எனது தாய் மற்றும் தந்தை மிகவும் சிரமப்பட்டு என்னை கவனித்துக்கொண்டனர். மேலும் எனது படிப்பிற்கு உதவியவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு விபத்து ஏற்பட்ட பின்னர் வலியை பொறுத்துக்கொண்டு, தைரியத்துடன் அதனை எதிர்கொண்டேன். எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். என்னைப் போல விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலமைச்சர் உதவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
சிந்துவின் தந்தை சதிஷ் கூறும்போது, ”எனது மகளின் மருத்துவச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்கிறேன் எனக் கூறிய முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் விருப்பத்தை நிறைவேற்றி, மீண்டும் வாலிபால் விளையாட முடியும் என நம்பிக்கை அளித்துள்ள முதலமைச்சருக்கு மீண்டும் நன்றி” என்றார்.
இதையும் படிங்க: கோடம்பாக்கம் சிந்துவின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு