இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"பள்ளி கல்வித்துறையில் 2019-20ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய பாட புத்தகங்களுக்கு விலை நிர்ணயம் செய்ய அரசு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் மேலாண்மை கழகத்திற்கு அனுமதி அளிக்கிறது. 2019-20 ஆம் கல்வியாண்டில் 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அச்சடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தப் பாடப் புத்தகங்கள் 80 ஜிஎஸ்எம் பேப்பரிலும், புத்தகத்தின் மேல் அட்டை நான்கு வண்ணத்தில் அச்சடிக்கப்பட்டு லேமினேஷன் செய்து பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.
பாடப்புத்தகங்களுக்கு உரிய விலையினை அவற்றின் பக்கங்களின் எண்ணிக்கைக்கேற்ப நிர்ணயம் செய்து கொள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதனடிப்படையில் 40 முதல் 52 பக்கங்கள் கொண்ட ஒரு பாடப் புத்தகம் ரூ.30, 56 முதல் 72 பக்கங்கள் கொண்ட பாடப்புத்தகம் ரூ. 40, 76 முதல் 92 பக்கங்கள் கொண்ட பாடப் புத்தகம் ரூ.50, 96 முதல் 116 பக்கங்கள் கொண்ட பாடப்புத்தகம் ரூ.60, 120 முதல் 136 பக்கங்கள் கொண்ட பாடப் புத்தகம் ரூ.70 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக 352 முதல் 368 பக்கங்கள் கொண்ட ஒரு பாடப் புத்தகத்தின் விலை ரூ.180 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பக்கங்களின் எண்ணிக்கைக்கேற்ப புத்தகத்திற்கு விலையை நிர்ணயம் செய்து வருகிறது. தற்போது மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயார் செய்து அளிக்கும் புத்தகங்களை அச்சிடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மே மாதம் இறுதியில் அனைத்துப் புத்தகங்களும் விற்பனைக்கு வர உள்ளன", என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.