தமிழ்நாட்டில் கோடைக்காலம் முடிந்து ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்து பத்து நாட்களை கடந்தும் இன்னும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்துவருகின்றன. மேலும், பள்ளிகளில் தண்ணீர் பஞ்சம் நிலவிவருவதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
பள்ளிகளில் புத்தகங்கள் வழங்காததைக் கண்டித்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்கள் அனுப்பப்பட்டுவிட்டன. இணையதளத்தில் புத்தகங்களை அரசு வெளியிட்டுள்ளது. எல்லோரும் எடுத்து படிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
தண்ணீர் பற்றாக்குறையால் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறதே என்ற கேள்விக்கு, தண்ணீர் பற்றாக்குறையால் அரசுப் பள்ளிகள் எங்கும் மூடவில்லை என திட்டவட்டமாக அவர் தெரிவித்தார்.