மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் ஏழை மாணவா்கள் படிக்க 25 சதவீத இடஒதுக்கீடு முறை கடந்த 2013-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அந்தவகையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்டுவருகின்றனர்.
கடந்தாண்டு வரையில் ஏப்ரல் 2ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, 10ஆம் தேதி பள்ளியின் தகவல் பலகையில் இடங்களின் அறிவிப்பு வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 16ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறுவதற்கான அறிவிப்பினை பள்ளித் தகவல் பலகையில் வெளியிட, ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே மாதம் 18 ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு, மே 29்ஆம் தேதிக்குள் மாணவர்கள் சேர்க்கை முடிக்கப்படும்.
இந்த நிலையில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், மெட்ரிக்குலேசன் பள்ளியின் இயக்குனருமான கருப்பசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அனைவருக்கும் கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குழந்தைகள் எல்கேஜி அல்லது நுழைவு வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர்.
அந்த வகையில், ஏப்ரல் 2ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கும். தற்போது கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் 2020-2021ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், அதற்கான அட்டவணையும் பின்னர் அறிவிக்கப்படும்.
எனவே தனியார் பள்ளிகள் இலவச கட்டயாக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர்களை சேர்க்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை!